திருவெண்ணெய்நல்லூர் அருகே கால்நடை மருத்துவமனை ஊழியர் அடித்துக் கொலை


திருவெண்ணெய்நல்லூர் அருகே கால்நடை மருத்துவமனை ஊழியர் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 5 July 2017 4:00 AM IST (Updated: 5 July 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆத்திரமடைந்த மனைவி கால்நடை மருத்துவமனை ஊழியரை சுத்தியலால் அடித்துக்கொலை செய்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் பழனி (வயது 47). இவர் திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தலிங்கமடம் கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் செயற்கைமுறை கருவூட்டல் பணியாளராக வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி புவனேஸ்வரி(35). இவர்களுக்கு வேணி (11) என்ற மகளும், கிஷோர் (7) என்ற மகனும் உள்ளனர். பழனி தற்போது மணக்குப்பம் வயல்வெளி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கணவன்– மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கணவன்– மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. உடனே புவனேஸ்வரி தனது குழந்தைகள் இருவரையும் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு செல்லுமாறு அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து, புவனேஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பழனி தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த புவனேஸ்வரி, அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து பழனியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே புவனேஸ்வரி அங்கிருந்து புறப்பட்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனிடையே நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள், பழனி வீட்டில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் போலீசாருக்கு புவனேஸ்வரி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் பழனியை சுத்தியலால் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து புவனேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.


Next Story