திண்டுக்கல்லில் தொடரும் போராட்டம்: குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு நேற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நகருக்கு குடிநீர் வழங்கி வரும் ஆத்தூர் காமராஜர் அணை வறண்டு விட்டது. அதேபோல் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கிடைக்கும் குடிநீரின் அளவும் குறைந்து விட்டது. இதன் காரணமாக திண்டுக்கல் நகரில் ஒருசில பகுதிகளில் 45 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை நிலவுகிறது. மேலும் அந்த பகுதிகளில் மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
இது போதுமானதாக இல்லாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் திண்டுக்கல் நகரில் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாரதிபுரம் கலைஞர்நகரில் ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று நாகல்நகர் ரவுண்டானா பகுதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்கு சாலையில் காலிக்குடங்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து குடிநீர் வினியோகம் செய்வது பற்றி உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் சாலை மறியல் தொடர்ந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலைஞர்நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.