5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு கொடிஏற்றி, கடைகளை அடைத்து போராட்டம்

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடத்தில் கருப்பு கொடிஏற்றி, கடைகளை அடைத்து போராட்டம்
பல்லடம்,
பல்லடத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். பல்லடம்– மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். பல்லடம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்பட வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகம், சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பல்லடம் பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இவர்களதுகோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி, பல்லடத்தில் அரசியல் கட்சிகள், பல்வேறு நலச்சங்கங்கள், பல்வேறு அமைப்புகள் ஒன்று திரண்டு தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக 4–ந்தேதி (நேற்று) கடைகளில் கருப்புகொடி ஏற்றி கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
இந்த போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல துண்டு பிரசுரம், வேன் பிரசாரம் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது கடைகளில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டு இருந்தது.
அதன்படி திருச்சி ரோடு, என்.ஜி.ஆர்.ரோடு, மங்கலம் ரோடு, மத்திய பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் ஆகிய ரோடு பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள், டீ ஸ்டால், நகை கடைகள், காய்கறி கடைகள், பேன்சி ஸ்டோர்கள், பெட்டிக்கடைகள், புத்தக கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.






