புஞ்சைபுளியம்பட்டி, பெருந்துறையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


புஞ்சைபுளியம்பட்டி, பெருந்துறையில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 6 July 2017 3:30 AM IST (Updated: 5 July 2017 11:04 PM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி, பெருந்துறையில் வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி 4 பேர் படுகாயம்

ஈரோடு,

சத்தியமங்கலம் அருகே உள்ள ராஜன் நகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 26). இவர் விசே‌ஷ நிகழ்ச்சிகளுக்கு ‘டெக்ரே‌ஷன்’ செய்யும் பணி செய்து வந்தார். இந்தநிலையில் சக்திவேல் புஞ்சைபுளியம்பட்டி அருகே பருசபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அவருடன் நண்பர்கள் 2 பேர் சென்றனர். இவர்கள் பொன்னம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, நின்றுகொண்டு இருந்த தனியார் பஸ் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

பெருந்துறை அருகே உள்ள கம்புளியம்பட்டி பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் (50). இவருடைய மனைவி அமுதா (42). இவர்களுடைய மகன் எட்வின் ஜேக்கப் (14). ராபர்ட் மொபட்டில் தனது மனைவி, மகனுடன் பெருந்துறை அருகே கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்றுகொண்டு இருந்தார். வாய்ப்பாடி பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று ராபர்ட் ஓட்டிச்சென்ற மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மொபட்டில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்ததும் காரை அங்கேயே விட்டுவிட்டு டிரைவர் வருண் தப்பி ஓடிவிட்டார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராபர்ட் பரிதாபமாக இறந்தார். அமுதா மற்றும் எட்வின் ஜேக்கப்புக்கு டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்–இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் வருணை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story