சினிமா தொழிலை காப்பாற்ற நடிகர்கள் சம்பளத்தை குறைக்கலாம் சீமான் பேட்டி


சினிமா தொழிலை காப்பாற்ற நடிகர்கள் சம்பளத்தை குறைக்கலாம் சீமான் பேட்டி
x
தினத்தந்தி 6 July 2017 4:30 AM IST (Updated: 6 July 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. காரணமாக சினிமா தொழிலை காப்பாற்ற நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சேலம்,

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க வந்த அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் மதுவிற்கு வரி விதிக்கவில்லை. மின்சாரத்திற்கு வரி விதிக்கவில்லை. சாதாரண மக்கள் பயன்படுத்தும் மெழுகுவர்த்தி மற்றும் ஊதுவத்திக்கு வரி விதித்து விட்டனர். இதனால் ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். விமான கட்டணத்திற்கு ஒரு சதவீதம் மட்டுமே வரி விதித்துள்ளனர். மேலும் கார்பரேட் நிறுவனங்களுக்கும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் ஜி.எஸ்.டி. சாதகமாக உள்ளது.

சமையல் சிலிண்டர் விலை ரூ.32 அதிகரித்து உள்ளது. இதேபோல், ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதுபற்றி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கேட்டபோது, ஓட்டலில் சாப்பிடாதீர்கள். வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள் என்று பதில் சொல்கிறார். இது முரண் பாடாக உள்ளது.


உலகில் உள்ள பல நாடுகள் கல்வி, சுகாதாரத்தை இலவசமாக வழங்குகின்றன. அதேபோல், ஜி.எஸ்.டி. விதித்துள்ள மத்திய அரசு கல்வி, சுகாதாரத்தை இலவசமாகவும், தரமாகவும் வழங்க முடியுமா?. மக்கள் ஆற்றலை திரட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு வரவேண்டும். இப்படி வரி விதிப்பால் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டுவர முடியாது.

சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசு 28 சதவீதம் வரி விதித்துள்ளது. இதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மாநில அரசு 20 சதவீதம் கேளிக்கை வரியை விதித்துள்ளது. அதை குறைக்க வாய்ப்பில்லை என்றாலும் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்தக்கூடாது.

அப்படி உயர்த்தினால் திருட்டு சி.டி.க்களின் புழக்கம் அதிகரித்துவிடும். மக்கள் தியேட்டர் பக்கம் செல்ல மாட்டார்கள். சினிமா தொழிலை காப்பாற்ற நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்கலாம். இதுபற்றி டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் பேசி முடிவெடுக்க வேண்டும். ஆந்திராவில் நதிகளை இணைத்து வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கூடுதல் மதுக்கடைகளை திறந்து வருகிறார்கள்.

இவ்வாறு சீமான் கூறினார்.


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசும் போது, ‘’தமிழகத்தில் எத்தனை ஆறுகள் ஓடுகிறது என்பது ரஜினிகாந்துக்கு தெரியாது. இதேபோல் தமிழில் உள்ள உயிரெழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகியவையும் அவருக்கு தெரியாது. மேலும் விவசாய உரிமைக்காக போராடி எத்தனை விவசாயிகள் இறந்துள்ளனர் என்பதும் தெரியாது. இதனை எல்லாம் சொல்லிவிட்டு பின்னர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும்” என்றார். 

Related Tags :
Next Story