தோட்டத்து வீட்டில் தம்பதியை தாக்கி ரூ.3 லட்சம் நகை, பணம் கொள்ளை


தோட்டத்து வீட்டில் தம்பதியை தாக்கி ரூ.3 லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 7 July 2017 4:45 AM IST (Updated: 7 July 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அருகே தோட்டத்து வீட்டில் இருந்த தம்பதியை தாக்கி ரூ.3 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்தனர். பின்னர் தம்பதியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து விட்டு தப்பிய 2 மர்ம ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர்.

எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு தாலுகா மொஞ்சனூர் கிராமம் அரசம்பாளையம் அருகே கொம்பேறிக்காட்டில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் வெள்ளைய கவுண்டர் (வயது 55), விவசாயி. இவருடைய மனைவி பாப்பாத்தி(50). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர் சென்னையில் தங்கி வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளைய கவுண்டர் வீட்டின் முன்பு கட்டிலில் படுத்து தூங்கினார். அதிகாலை 3 மணியளவில் அங்கு 2 மர்ம ஆசாமிகள் முகமூடி அணிந்து வந்தனர்.

அப்போது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு எழுந்த வெள்ளைய கவுண்டரை, அங்கு வந்த மர்ம ஆசாமிகள் கட்டிலில் தள்ளி, கழுத்தில் காலை வைத்து சரமாரியாக தாக்கினர். மேலும் காலிலும் தாக்கினர். இதில் அவர் காலில் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். பின்னர் அவரை கட்டிலில் கட்டி போட்டனர்.

இதனிடையே அந்த பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டும், கணவரின் சத்தம் கேட்டும் உள்பக்கமாக பூட்டி இருந்த கதவை திறந்து கொண்டு பாப்பாத்தி வீட்டில் இருந்து வெளியே வந்தார். உடனே அந்த மர்ம நபர்களில் ஒருவன் பாப்பாத்தியை கன்னத்தில் அறைந்து கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பீரோ சாவியை கேட்டான்.

அப்போது சாவியை எடுத்து கொடுத்த பாப்பாத்தியை மீண்டும் கையால் அவர்கள் அடித்தனர். பின்னர் பீரோவில் இருந்த 7 பவுன் தாலிச்சங்கிலி, சுமார் 5 பவுன் வளையல் மற்றும் 3 ஜோடி தோடுகள் என 15 பவுன் நகைகளையும், ரொக்கம் ரூ 2ஆயிரத்தையும், செல்போனையும் கொள்ளை அடித்தனர்.

அதன்பிறகு பாப்பாத்தியின் முகத்தில் அவர்கள் வைத்திருந்த ‘ஸ்பிரே‘ மூலம் மயக்க மருந்தை தெளித்தனர். இதில் பாப்பாத்தி மயங்கி விழுந்தார். உடனே வீட்டில் இருந்து வெளியே வந்த கொள்ளையர்கள், கட்டிலில் கட்டப்பட்டு கிடந்த வெள்ளையகவுண்டர் முகத்திலும் மயக்க மருந்தை தெளித்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

பின்னர் நேற்று காலையில் மயக்கம் தெளிந்து எழுந்து அக்கம்பக்கத்தினருக்கு பாப்பாத்தி தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எலச்சிபாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சுமார் ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. மேலும் கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த வெள்ளையகவுண்டர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை தாக்கி கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Related Tags :
Next Story