ஈரோட்டில் வாயில் கருப்பு துணி கட்டி ஜவுளி வியாபாரிகள் போராட்டம்
ஈரோட்டில் 2–வது நாளாக வேலைநிறுத்தம்: வாயில் கருப்பு துணி கட்டி ஜவுளி வியாபாரிகள் போராட்டம்
ஈரோடு,
ஜவுளி உற்பத்திக்கு 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிளாத் மெர்ச்சண்ட்ஸ் அசோசியேசன் (எக்மா) சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 6 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று சங்க தலைவர் ரவிச்சந்திரன் அறிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று முன்தினம் முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஜவுளிக்கடைகள் மூடப்பட்டன. மேலும் 35 ஆயிரம் விசைத்தறிகளிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக ஈரோடு மாவட்டம் முழுவதும் ஜவுளி கடைகள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஜவுளி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஜவுளி துறையை சேர்ந்த 22 சங்க நிர்வாகிகள், ஜவுளி வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டார்கள்.