சிவகங்கை பைபாஸ் சாலையில் ஒரே நேரத்தில் 2 கார்கள்–ஆட்டோ மோதி விபத்து டிரைவர் பலி


சிவகங்கை பைபாஸ் சாலையில் ஒரே நேரத்தில் 2 கார்கள்–ஆட்டோ மோதி விபத்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 8 July 2017 3:30 AM IST (Updated: 7 July 2017 11:06 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை பைபாஸ் சாலையில் ஒரே நேரத்தில் 2 கார்கள்– ஆட்டோ ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகங்கை,

கடலூர் மாவட்டம் அம்பலவாணன் பேட்டையை அடுத்த குறிஞ்சி பட்டியை சேர்ந்த 8 பேர் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு காரில் மானாமதுரைக்கு சென்றனர். அந்த கார் சிவகங்கை பைபாஸ் சாலையில் நான்கு ரோடு சந்திப்பு சாலையில் சென்றபோது சிவகங்கையில் இருந்து பாசாங்கரை கிராமத்திற்கு சென்ற ஆட்டோவும் அதே நேரத்தில் மேலூர் பகுதியில் இருந்து சிவகங்கை நோக்கி வந்த மற்றொரு காரும் எதிர்பாராதவிதமாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் கடலூரில் இருந்து வந்த கார் ரோட்டில் உருண்டு கவிழ்ந்தது. ஆட்டோவும் மற்றொரு காரும் ஒன்றுடன் ஒன்று மோதி நின்றன. இந்த விபத்தில் கடலூரில் இருந்து வந்த காரில் இருந்த ரவிந்திரன் (வயது 37), இவருடைய தம்பி புவிந்திரன் (34) மற்றும் பிரசாந்தன்(26), யுவராஜ் (36) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் ஆட்டோவில் வந்த பாசாங்கரை கிராமத்தை சேர்ந்த பொன்னம்மான் (80) மட்டாகுளம் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்(33) மற்றும் ஆட்டோ டிரைவர் கார்த்திக்ராஜா(32) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயம் அடைந்த 7 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆட்டோ டிரைவர் கார்த்திக்ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் மோகன், சப்– இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கார்த்திகேயன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தனர். சிவகங்கை தாசில்தார் நாகநாதன் சம்பவ இடத்த பார்வையிட்டார். தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்து நடைபெற்ற பகுதியில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் மேலூர்– சிவகங்கை ரோட்டில் முழுமையாக வேகத்தடை அமைக்காததால் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே விபத்துகளை தடுக்க ரோட்டின் இருபுறமும் முழுமையாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story