ஏமாற்றிய தென்மேற்கு பருவக்காற்று: உவரி கடற்கரை பகுதியில் இறால் மீன் குறைவாக கிடைக்கிறது
தென்மேற்கு பருவக்காற்று ஏமாற்றியதால் உவரி கடற்கரை பகுதியில் இறால் மீன்கள் குறைந்த அளவில் கிடைக்கிறது என்று மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திசையன்விளை,
தென்மேற்கு பருவக்காற்று ஏமாற்றியதால் உவரி கடற்கரை பகுதியில் இறால் மீன்கள் குறைந்த அளவில் கிடைக்கிறது என்று மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இறால் மீன் சீசன்நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மூலம் மட்டுமே மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி, பெருமணல் உள்ளிட்ட 11 மீனவ கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் இறால் மீன் சீசன் காலங்கள் ஆகும். இந்த ஆண்டு இறால் மீன் சீசன் தொடங்கி 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனாலும் கடலில் குறைந்த அளவே இறால் மீன்கள் கிடைக்கிறது. எனவே இறால் மீன்களில் இருந்து கிடைக்கும் வருவாய், அதனை பிடிக்கச் செல்லும் படகுகளில் பொருத்தப்பட்டு இருக்கும் எந்திரத்துக்கான எரிபொருள் செலவுக்கே சரியாக உள்ளது. மற்றபடி எந்தவித லாபமும் இல்லை என்று மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதிக வருவாய்இதுகுறித்து உவரி மீனவர் ஜெயக்குமார் வேதனையுடன் கூறியதாவது:–
இறால் மீன் சீசனானது ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் இருக்கும். இங்கு பிடிபடும் இறால்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
மீன்பிடி தடைகாலம் முடிந்து ஒரு மாதத்துக்குள் இறால் சீசன் தொடங்குவதால் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். கடந்த ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் இறால் பிடித்து நல்ல லாபம் பெறலாம் என்று எதிர்பார்த்து இருந்தோம்.
தென்மேற்கு பருவக்காற்றுஆனால் இந்த ஆண்டு போதுமான அளவு இறால் கிடைக்கவில்லை. தென்மேற்கு பருவக்காற்று வீசும் போது கடற்கரையில் இருந்து சிறிது தொலைவு வரை கடல் பகுதி குளிர்ந்த நிலையில் காணப்படும். அப்போது ஆழ்கடலில் வசிக்கும் இறால் மீன்கள் கடற்கரை பகுதிக்கு வரும். அப்போதுதான் மீனவர்கள் வலையில் இறால் சிக்குகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று ஏமாற்றி விட்டது. எனவேதான் இறால் மீன் குறைந்த அளவில் கிடைக்கிறது. இதனால் பெரிய அளவில் லாபம் இல்லை.
20 உருப்படி கொண்ட இறால் கிலோவுக்கு ரூ.600–ம், 25 உருப்படி கொண்ட இறால் கிலோவுக்கு ரூ.500–ம், 30 உருப்படி கொண்ட இறால் கிலோவுக்கு ரூ.450–ம் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் வரக்கூடிய நாட்களிலாவது கடற்கரை பகுதியில் தென்மேற்கு பருவக்காற்று போதுமான அளவு வீச வேண்டும். அப்போதுதான் அதிக இறால் கிடைக்கும்.
இவ்வாறு மீனவர் ஜெயக்குமார் கூறினார்.