காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் பேச்சு


காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் பேச்சு
x
தினத்தந்தி 8 July 2017 2:45 AM IST (Updated: 8 July 2017 12:01 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் பேசினார்.

நெல்லை,

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சியின் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் பேசினார்.

ஆலோசனை கூட்டம்

காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார், மேற்கு மாவட்ட தலைவர் பழனி நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், காங்கிரஸ் தேர்தல் பிரிவு மேலிட பார்வையாளர் சஞ்சய் தத், நெல்லை மாநகர் மாவட்ட உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் திருச்சி வேலுச்சாமி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சுந்தரம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பாலையா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இதில் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத் பேசுகையில் கூறியதாவது:–

அதிக உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர். பிற கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு உதவி செய்யும் நிலையிலேயே நாம் இருக்கிறோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைக்க காங்கிரசார் சேர்ந்து பாடுபட வேண்டும். தமிழகத்தில் விரைவில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அதிகமானோர் இருந்தால்தான் காங்கிரஸ் தொண்டர்கள், பதவியில் இருப்பவர்களை எளிதாக சந்தித்து தங்களது பகுதி கோரிக்கையை எடுத்துக்கூறி நிறைவேற்ற முடியும். அவ்வாறு செய்தால் அவரவர் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகிகள் தலைநிமிர்ந்து செயல்பட முடியும். அதற்கு முதற்கட்டமாக காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் பேரை காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேல்துரை, ரவிஅருணன், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் காமராஜ், நெல்லை பாராளுமன்ற தொகுதி முன்னாள் தலைவர் வி.பி.துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story