தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய மீனவர்களை பாதுகாக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்


தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய மீனவர்களை பாதுகாக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 July 2017 3:00 AM IST (Updated: 8 July 2017 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரம்பரிய மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மீன்வளத்துறை இணை இயக்குனர் ரீனாசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மீனவர்களின் பிரதிநிதிகள் பேசியதாவது:–

நிவாரண உதவி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்ற படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளன. அந்த படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதனால் பிடிபட்ட படகுகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட படகு உரிமையாளர்கள், ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு ஏற்ற படகு வாங்குவதற்கு அரசு உதவித் தொகை வழங்குகிறது. அந்த திட்டத்தில் எங்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.

தடையில்லா சான்று...

திரேஸ்புரம் பகுதியில் உள்ள அலைதடுப்புச்சுவரில் வடக்கு பகுதியில் சுமார் 20 மீட்டர் தூரத்துக்கு அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கு போலீசாரின் தடையில்லா சான்று பெற வேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. திரேஸ்புரம் தூண்டில் வளைவில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் படகுகள் செல்ல மிகவும் சிரப்படுகிறது. ஆகையால் மின்விளக்கு வசதி செய்யப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்புகளால் பிரச்சினை

திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக பஸ்கள் ஊருக்குள் வரவில்லை. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை சேர்க்க கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் 60 வயதுக்கு மேல் உள்ள மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பாரம்பரிய மீனவர்கள்

மணப்பாட்டில் தூண்டில் வளைவு அமைக்க ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் 93 சதவீதம் நாட்டுப்படகு மீனவர்களும், 5 சதவீதம் விசைப்படகு மீனவர்களும் உள்ளனர். பாரம்பரிய மீனவர்களை பாதுகாக்கக்கூடிய தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பதிவு செய்யப்படாத சில விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. இவர்கள் வலைகளை சேதப்படுத்துகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். வெள்ளப்பட்டி பகுதியில் சில தனியார் தொழிற்சாலைகள் அமிலக்கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பக்கிள் ஓடையில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும், என்று கூறினர்.

அதிகாரிகள் விளக்கம்

இதற்கு பதில் அளித்து கலெக்டர் வெங்கடேஷ் கூறுகையில்,‘ மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். கூட்டத்தில் அதிகாரிகள் பேசுகையில், ‘மீனவர்கள் அடையாள அட்டைக்கு போலீசின் தடையில்லா சான்று பெறுவதற்கு தனியாக முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். மாவட்டம் முழுவதும் 43 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் மீனவர்களையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அமலிநகர் பகுதியில் மீண்டும் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி அருகே சில தொழிற்சாலை கழிவுநீர் தேங்கி இருப்பதாக வந்த புகாரின் பேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சில தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி இருப்பது தெரியவந்தது. இதனால் 3 நிறுவனங்களுக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டு உள்ளது. பக்கிள் ஓடையில் தொழிற்சாலைகள் கழிவுநீரை கலந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். கூட்டத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் பாலசரசுவதி, கணேஷ்நேரு, உதவி பொறியாளர் சந்திரன் மற்றும் அதிகாரிகள், மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story