புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி, 7 பேர் கைது


புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி, 7 பேர் கைது
x
தினத்தந்தி 9 July 2017 4:15 AM IST (Updated: 9 July 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி விழாவில் பங்கேற்க வந்த புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை,

புதுச்சேரியில் மாநில அரசின் பரிந்துரையின்றி பா.ஜனதாவை சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. அவர்களுக்கு இரவோடு இரவாக கவர்னர் கிரண்பெடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், புதுச்சேரியில் மத்திய அரசை கண்டித்தும், கவர்னரை திரும்ப பெறக்கோரியும் நேற்று முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரியில் இருந்து நேற்று மதியம் திருநாவலூருக்கு வந்தார்.

இந்த நிலையில் கெடிலம் பஸ் நிறுத்தம் வழியாக செல்ல இருந்த கவர்னர் கிரண்பெடிக்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியை சேர்ந்த சிலர் கருப்பு கொடி காட்ட உள்ளதாக திருநாவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கெடிலம் பஸ் நிறுத்தத்துக்கு விரைந்து சென்றனர்.


அப்போது அங்கு கிரண்பெடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க கருப்பு கொடியுடன் நின்று கொண்டிருந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் கலியமூர்த்தி, கஜேந்திரன், ரங்கநாதன், கலைமணி, ஜெயராமன், செண்பகவள்ளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பிறகு சற்று நேரத்தில் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, அந்த வழியாக காரில் சென்றார். கைதான 7 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story