இந்திரா காந்தியின் நன்மதிப்பை தவறாக சித்தரிக்கும் இந்திப்பட பிரச்சினையில் முதல்-மந்திரி தலையிட வேண்டும்


இந்திரா காந்தியின் நன்மதிப்பை தவறாக சித்தரிக்கும் இந்திப்பட பிரச்சினையில் முதல்-மந்திரி தலையிட வேண்டும்
x
தினத்தந்தி 9 July 2017 3:34 AM IST (Updated: 9 July 2017 3:34 AM IST)
t-max-icont-min-icon

இந்திரா காந்தியின் நன்மதிப்பை தவறாக சித்தரிக்கும் வகையில் உருவான இந்திப்பட பிரச்சினையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலையிட வேண்டும்.

மும்பை,

இந்திரா காந்தியின் நன்மதிப்பை தவறாக சித்தரிக்கும் வகையில் உருவான இந்திப்பட பிரச்சினையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலையிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

இந்தி படம்

மதுர் பண்டர்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இந்து சர்க்கார்’. இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நெருக்கடி நிலை காலகட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், இது வரலாற்றை திரித்து கூறும் முயற்சி என்றும் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இப்படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே ‘இந்து சர்கார்’ படம் வரும் 28-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல் (காங்கிரஸ்) கூறியதாவது:-

உணர்வுகளை புண்படுத்தும்...


முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி ஆகியோர் குறித்து ‘இந்து சர்க்கார்’ படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நெருக்கடி நிலையின்போது நிலவிய பிரச்சினைகள் குறித்த தவறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த படத்தை வெளியிடும் முடிவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலையிட வேண்டும்.

உண்மையின் அடித்தளம் உடைத்தெரியப்படுவதை நீங்கள் ஊக்குவித்தால், அது மக்களின் உணர்வுகளை புண்படுத்தும். காங்கிரஸ் தலைவர்களின் நன்மதிப்பை சீர்குலைக்க நினைத்தால் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எனவே சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க முதல்-மந்திரி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story