கிணத்துக்கடவில் அலக ரெயில்பாதை பணி முடிந்தும் ரெயில் போக்குவரத்து தொடங்காமல் இழுத்தடிப்பு புழுதி பறக்கும் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
போத்தனூர்–பொள்ளாச்சி அகல ரெயில்பாதை பணிகள் முடிந்தும் ரெயில் போக்குவரத்து தொடங்காமல் இழுத்தடிக்கும் நிலை உள்ளது. புழுதிபறக்கும் பொள்ளாச்சி சாலையால் வான ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு,
போத்தனூர் –பொள்ளாச்சி இடையேயான 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருந்த மீட்டர் கேஜ் ரெயில்பாதை கடந்த 2009–ம் ஆண்டு இறுதியில் அகற்றப்பட்டது. அதன்பின்னர் இந்த பகுதியில் அகலரெயில் பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
அகலரெயில்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் நிலம் தேவைப்பட்டதால், இந்த பகுதியில் ரெயில்வே துறையினர் ஆய்வு மேற்கொண்டு கூடுதலாக தேவைப்படும் நிலம்குறித்து வருவாய்துறைக்கு தெரியப்படுத்தினார்கள். பின்னர் வருவாய்துறையினர் செட்டிபாளையம், அரசம்பாளையம், சொலவம்பாளையம், நல்லட்டிபாளையம் உள்பட பல்வேறு பகுதியில் ஆய்வு நடத்தி மேற்கண்ட பகுதிகளில் இருந்த விவசாயிகளிடம் இருந்து 43 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீட்டு தொகையாக ரூ.8 கோடி வழங்கப்பட்டது.
போத்தனூரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவு பகுதியில், செட்டிபாளையம், அரசம்பாளையம், சொலவம்பாளையம்பகுதியில் ரெயில்வே தண்டவாளங்கள் 4½ கீலோமீட்டர் தூரத்திற்க்கு 3 மீட்டர் முதல் 20 மீட்டர் வரை பள்ளத்தில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன.
இந்த பகுதியில் பாறைகள் அதிகமாக இருந்ததால் பாறைகளை வெட்டி எடுப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. ரெயில்வே துறையினர் நவீன எந்திரங்கள் கொண்டு பாறைகளை வெட்டி எடுக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு பணிகளை முடித்தனர். இதேபோன்று கிணத்துக்கடவில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 3 மீட்டர் முதல் 10 மீட்டர் உயரத்தில் ரெயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வழிப்பாதையில் முக்கியமாக விளங்கும் கிணத்துக்கடவில் ரெயில் நிலையம் கட்டும் பணியும் முடிந்துவிட்டது. ரெயில்வே நடைமேடை உட்பட அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. இந்த பகுதியில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கிணத்துக்கடவில் உள்ள புதிய ரெயில்வே அலுவலகத்தையும் திறந்து வைத்து விட்டு விரைவில் போத்தனூர்–பொள்ளாச்சி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று தெரிவித்தனர். ஆனால் 3 மாதம் ஆகியும் போத்தனூர்–பொள்ளாச்சி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்காமல் இழுத்தடிப்பு நிலை உள்ளது. ஆகவே அந்த வழியாக ரெயில் ஒடுமா? ஓடாதா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரெயில் நிலையம் தனியாக தவிக்கும் நிலை உள்ளது. அதேபோல் இந்த வழித்தடம் பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரை பாலக்காடு ரெயில்வே கோட்டத்தில் வருவதால் பாலக்காடு ரெயில்வேகோட்டம் வேண்டும் என்றே காலதாமதம் செய்வதாக சமூக ஆர்வலர்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ரெயில்வே துறையினரிடம் கேட்டால் போத்தனூர்–பொள்ளாச்சி வழிதடத்தில் ரெயில்சேவையை தொடங்க மத்திய அரசின் ரெயில்வே அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் போத்தனூர்–பொள்ளாச்சி அகல ரெயில் பாதை பணிகள் முடிந்து பொதுமக்களுக்கு கண்காட்சி வழித்தடமாக மாறியுள்ளது. இதற்கிடையில் தற்போது கிணத்துக்கடவு பகுதியில் கோவை ஈச்சனாரிமுதல் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி முதல் 26.85 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் ரோட்டின் இருபுறமும் குழிகள் தோண்டப்பட்டுள்ளது. மேலும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதாலும், புழுதிபறப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்த வருகின்றனர். இதனால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதி சுற்றுவட்டார பொதுமக்கள் புழுதிபறக்கும்சாலையில் சென்று அவதிப்படும் நிலை உள்ளது. இந்த நேரத்தில் ரெயில்வே நிர்வாகம்தனிக்கவனம் செலுத்தி போத்தனூர்–பொள்ளாச்சி வழிதடத்தில் ரெயில்சேவையை விரைந்து தொடங்கினால் பொதுமக்கள், பள்ளி, கல்லுரி மாணவர்கள் சிரமமின்றி கோவை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு செல்ல வசதியாக இருக்கும். இதனால் ரெயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:– சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு உள்ள நிலையில் ரெயில் போக்குவரத்தை பாலக்காடு கோட்டம் தாமதம் படுத்தி வருகிறது. கோவை, பாலக்காடு கோட்டத்தில் இருந்த போது, இதேபோன்று பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தது. மேலும் வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் கோவைக்கு வராமல் போத்தனூர் வழியாக பாலக்காட்டிற்கு இயக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ரெயில்வே போராட்டக்குழு உருவாக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தி, தீர்வு காணப்பட்டது. ஆனால் பொள்ளாச்சி–போத்தனூர் இடையே ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கு போராட்டம் நடத்த யாரும் முன்வரவில்லை. எனவே கோவையை போன்று பொள்ளாச்சியில் ரெயில்வே போராட்டக்குழுவை உருவாக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் என்று சேர்ந்து போராட்டக்குழுவை உருவாக்கி இதற்கான போராட்டத்தை முன் எடுக்க திட்டமிட்டுள்ளன. மேலும் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரெயில் நிலையங்களை பாலக்காடு கோட்டத்தில் இருந்து பிரித்து சேலம் அல்லது மதுரை கோட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்துள்ளது.