தே.மு.தி.க, ம.தி.மு.க., த.மா.கா. கட்சிகள் காணாமல் போய்விட்டன: டாக்டர் அன்புமணி ராமதாஸ்


தே.மு.தி.க, ம.தி.மு.க., த.மா.கா. கட்சிகள் காணாமல் போய்விட்டன: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
x
தினத்தந்தி 10 July 2017 5:00 AM IST (Updated: 10 July 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த தே.மு.தி.க., ம.தி.மு.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் காணாமல் போய் விட்டன என்று வானூரில் நடந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

வானூர்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சமூக முன்னேற்ற சங்க மாநில தலைவர் பரந்தாமன் தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் எம்.பி. தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் பேசினார்கள். அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் இருந்து வருகிறார். அவர் மத்திய பா.ஜ.க. அரசுக்கு அடிமையாகிவிட்டார். கடந்த தேர்தலில் தோல்வியடைந்த விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க., ம.தி.மு.க., த.மா.கா. போன்ற கட்சிகள் காணாமல்போய் விட்டன. பா.ம.க. மட்டுமே தொடர்ந்து மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து போராடி வருகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்ற நம்பிக்கை கூடிக்கொண்டே வருகிறது.

டெல்டா மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிலத்தடிநீரை உறிஞ்சி வருவதால் விவசாயம் செய்யமுடியாத நிலை உள்ளது. அப்பகுதியில் தற்போது 200 ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். மேலும் 2000 ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பேராபத்து ஏற்படும்.

மணல் மூலம் ஆண்டுக்கு ரூ.88 கோடி மட்டுமே வருமானம் வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால் மாநிலத்தில் 42 மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 7 குவாரிகளை அமைக்க உள்ளது. 90 ஆயிரம் லாரிகள் மணல் எடுக்கின்றன. நாள் ஒன்றுக்கு மணல் மூலம் ரூ.100 கோடி வருமானம் கிடைக்கும். எனவே மணல் விற்பனையில் பல கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது.

மணல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதில் 24 நாட்களில் ரூ.33 கோடி வருமானம் வந்ததாக தெரிவித்துள்ளார். இதில் இருந்தே எவ்வளவு கொள்ளை மணலில் நடக்கிறது என்பது தெரிகிறது.

ஜி.எஸ்.டி. வரி மூலம் தமிழகம் தனித்தன்மையை இழந்து வருகிறது. சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி, கோவில்பட்டி கடலைமிட்டாய், திண்டுக்கல் பூட்டு ஆகியவை தமிழகத்தின் அடையாள தொழில்கள். இந்த தொழில்கள் 28 சதவீத வரியால் பாதிக்கப்பட்டு உள்ளதுன.காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தால் குடியரசு தலைவர் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவு. இல்லையென்றால் பா.ம.க புறக்கணிப்பு செய்யும். இதையே தமிழகத்தில் உள்ள கட்சிகளும் செய்ய முன்வரவேண்டும். சுயநலத்திற்காக தேர்தலில் வாக்களிக்கக்கூடாது.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தொடர்ந்து பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், ‘சமூக முன்னேற்ற சங்கமும், பா.ம.க.வும் இனி இணைந்து செயல்படும். வருகிற செப்டம்பர் 17-ந் தேதி விழுப்புரத்தில் சமூக நீதி பாதுகாப்பு மாநாடு நடக்க உள்ளது. இதில் வடநாட்டு சமூக நல்லிணக்க தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த மாநாட்டில் சுமார் 20 லட்சம் பேர் கலந்துகொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

Next Story