பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை: வீட்டில் வாடகைக்கு குடியிருந்த தாய், 2 மகள்கள் கைது


பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை: வீட்டில் வாடகைக்கு குடியிருந்த தாய், 2 மகள்கள் கைது
x
தினத்தந்தி 10 July 2017 4:45 AM IST (Updated: 10 July 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூரில் பெண்ணை கட்டிப்போட்டு 7½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வாடகைக்கு குடியிருந்த தாய், 2 மகள்கள் கைது செய்யப்பட்டனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அண்ணா நகர் 6-வது தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது57). வெற்றிலை வியாபாரி. இவரது மனைவி பாஞ்சாலை(50). விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்தவர் லீலாவதி (55). கணவர் இல்லை. இவருக்கு கவிதா(28), தேன்மொழி(25) என 2 மகள்கள் உள்ளனர். இதில் தேன்மொழி கால் ஊனமுற்றவர். கடந்த 3 மாதத்திற்கு முன் சுப்பிரமணி வீட்டின் கீழ் தளத்தில் லீலாவதி தனது 2 மகள்களுடன் வாடகைக்கு குடி வந்தார்.

இந்தநிலையில் கடந்த 5-ந்தேதி சுப்பிரமணி வெற்றிலை வியாபாரத்திற்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது கீழ்தளத்தில் பூட்டப்பட்டு இருந்த வீட்டின் உள்ளே கை, கால் கட்டப்பட்டு தலையில் ரத்த காயத்துடன் பாஞ்சாலை மயங்கி கிடந்தார். இதையடுத்து கதவை உடைத்து பாஞ்சாலை மீட்கப்பட்டார். அவர் அணிந்து இருந்த தாலிச்சங்கிலி, வளையல், மோதிரம் என 7½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1½ லட்சம் ஆகும். பின்னர் பாஞ்சாலை சிகிச்சைக்காக சேலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இதில் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த லீலாவதி தனது 2 மகள்களுடன் சேர்ந்து பாஞ்சாலை அணிந்து இருந்த நகையை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் சரவணன், சப்- இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் ஆர்.சி.செட்டிபட்டி பிரிவு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த லீலாவதியை போலீசார் பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் காமலாபுரம் பிரிவு ரோட்டில் இருந்த கவிதா, தேன்மொழி ஆகியோரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7½ பவுன் நகையும் மீட்கப்பட்டது.

போலீசில் லீலாவதி கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-கணவர் இறந்து விட்டதால் நாங்கள் மிகவும் வறுமையில் வாடினோம். கடந்த 3 மாதத்திற்கு முன் சாப்பிட வழியின்றி பிழைப்பு தேடி பாஞ்சாலை வீட்டிற்கு வாடகைக்கு குடி வந்தோம். எனது ஊனமுற்ற மகள் தேன்மொழிக்கு பெங்களூருவில் மருத்துவம் பார்க்க வேண்டி இருந்தது. அவளது வைத்திய செலவுக்கு பணம் இல்லை. எனவே பாஞ்சாலையிடம் அணிந்து இருந்த நகையினை பறிக்க முடிவு செய்தோம். கடந்த 5-ந் தேதி வாடகை தருகிறேன் என கூறி அவரை வீட்டிற்கு வரவழைத்தேன். அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து விட்டு தோசைக்கரண்டியால் தலையில் தாக்கினோம். இதில் மயங்கிய அவரது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு நகையை கொள்ளையடித்தோம். பின்னர் கதவை பூட்டிவிட்டு ஆட்டோவில் தப்பி சென்றோம். இதையடுத்து விருதுநகர், சீர்காழி போன்ற இடங்களுக்கு சென்றோம். இந்தநிலையில் நாங்கள் குடியிருந்த வீட்டில் ஆதார்கார்டை விட்டு சென்று விட்டோம். இதனால் கவிதா, தேன்மொழி ஆகிய இருவரையும் காமலாபுரம் பிரிவு ரோட்டில் உட்கார வைத்துவிட்டு நான் ஆதார்கார்டை எடுக்க வந்தேன். அப்போது போலீசார் பிடித்துக் கொண்டனர். இவ்வாறு லீலாவதி தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைதான லீலாவதி, அவரது மகள்கள் கவிதா, தேன்மொழி ஆகிய 3 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Related Tags :
Next Story