டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

சத்தி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம், அருகே கோபி செல்லும் ரோட்டில் வாய்க்கால்மேடு உள்ளது. இந்த பகுதியில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தின் பின்புறம் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையை அகற்றக்கோரி சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், நேருநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை திடீரென நேருநகர் பகுதியில் ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள், ‘‘வேண்டாம், வேண்டாம் மதுக்கடை வேண்டாம்’’ ‘‘உடனே மதுக்கடையை அகற்றி வாழவிடு’’. ‘‘மாநில அரசே உடனே மதுக்கடையை அகற்று’’ என்று கோஷம் எழுப்பியபடி போராட்டம் நடத்தினார்கள்.
மேலும் அரியப்பம்பாளையம், நேருநகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியிருந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–
வாய்க்கால் மேட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த மே மாதம் 21–ந் தேதியும், கடந்த மாதம் 15–ந் தேதியும் சாலை மறியலில் ஈடுபட்டோம். அதன்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டாஸ்மாக் கடையை மூடினார்கள். ஆனால் சில நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டது.
எனவே டாஸ்மாக் கடையை மூடக்கோரி வாய்க்கால் மேட்டில் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமியிடம் மனு கொடுத்தோம். ஆனால் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.






