அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 11 July 2017 3:45 AM IST (Updated: 11 July 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

பாலையம்பட்டியில் உள்ள நெசவாளர் காலனியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

விருதுநகர்,

பாலையம்பட்டி நெசவாளர் காலனி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் சிவஞானத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி புறநகர் பகுதியில் புளியம்பட்டி நெசவாளர் காலனி உள்ளது. இந்த காலனியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. அடிகுழாய் அல்லது விசை பம்பு அமைக்கப்படவில்லை. எங்களுக்கு உப்பு தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்படுகிறோம். குடிப்பதற்கும் தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை.

இது குறித்து பாலையம்பட்டி பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் மற்றும் ஏற்கனவே இருந்த பஞ்சாயத்து தலைவர் ஆகியோரிடம் பல முறை மனு கொடுத்தும் நேரில் வற்புறுத்தியும் எந்த பலனும் இல்லை. பஞ்சாயத்து நிர்வாகம் எங்கள் பகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை.

எனவே எங்கள் காலனிக்கு அடிக்குழாய் அமைத்து தரவும், விசைப்பம்பு அமைக்கவும், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். எங்கள் பகுதியில் அனைத்து அடிப்படை வசகளையும் மேம்படுத்தி தர கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று சிப்பிப்பாறை கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் தங்கள் கிராமத்தில் அருந்ததியர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


Next Story