வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு கண்டுகொள்ளாத போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள்
மானாமதுரை வைகை ஆற்றில் தோட்டங்கள், வயல்வெளி வழியாக பாதை அமைத்து இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மானாமதுரை,
தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகும் வைகையாறு மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை வழியாக ராமநாதபுரம் செல்கிறது. மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் குடிநீர் தேவை, மற்ற தேவைகளுக்கு வைகை ஆறே நீராதாரமாக இருந்து வருகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் வைகை ஆற்றில் மணல் திருட்டு அமோகமாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரின் மையப்பகுதியில் வைகை ஆறு செல்கிறது. மற்ற பகுதிகளை விட மானாமதுரை பகுதியில் கிடைக்கும் மணல் தரமானதாக இருப்பதால் கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்கள் மானாமதுரை பகுதி மணலை விரும்பி வாங்குகின்றனர். 2 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் சிவகங்கையில் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மணலுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் பலரும் வைகை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருட்டுத்தனமாக மணல் அள்ள வைகை ஆற்றை ஒட்டியுள்ள தென்னந்தோப்புகளின் வழியாக பாதை அமைத்துள்ளனர். இரவு 10 மணியில் இருந்து காலை 4 மணி வரை மணல் அள்ளப்படுகிறது. ஆற்றினுள் மணல் அள்ளும் கும்பல் அதன் மேல் செங்கல் மற்றும் ஜல்லிகற்களை பரப்பி நூதன முறையில் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்கிறது. மானாமதுரை பகுதியில் கல்குறிச்சி, ராஜகம்பீரம், முத்தனேந்தல், கள்ளர்வலசை, கீழப்பசலை, வன்னிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக லாரிகளில் மணல் கடத்தல் நடைபெறுகிறது.
மானாமதுரை–சிவகங்கை பைபாஸ் சாலையையொட்டி பாலத்தின் அருகில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மணல் அள்ளியதால் பெரிய அளவில் பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக கல்குறிச்சி, ஆலங்குளம், கரிசல்குளம், கால்பிரவு உள்ளிட்ட பகுதி விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. 40 அடியில் தண்ணீர் கிடைத்து வந்த நிலையில் தற்போது 200 அடிக்கு கீழே தண்ணீர் போய்விட்டது. இதனால் நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மட்டுமே மோட்டார் இயக்க முடிவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கல்குறிச்சி பகுதியில் பெரும்பாலான விவசாய நிலங்கள் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக விவசாயம் செய்யாமல் தரிசாக கிடக்கிறது.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது:– கிராமங்களில் கோவில், நாடக மேடை உள்ளிட்டவற்றிற்கு மணல் திருடர்கள் தாராளமாக நிதிஉதவி செய்வதால் கிராமமக்கள் மணல் திருட்டை கண்டு கொள்வதில்லை. இதனால் இரவு நேரங்களில் கிராமத்தில் உள்ள வயல்வெளிகள் வழியாக மணல் கடத்தல் நடைபெறுகிறது. ஆனால் மாவட்ட நிர்வாகம், போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளும் மணல் திருட்டை கண்டு கொள்வதில்லை. வருவாய்த்துறை, கனிம வளத்துறை உள்ளிட்ட மணல் திருட்டு சம்பந்தமாக முக்கிய பிரிவுகளில் பெண்கள் உயர் அதிகாரிகளாக பணிபுரிவதால் இரவு நேரங்களில் மணல் திருட்டை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க யோசிக்கின்றனர். மேலும் உள்ளூர் வருவாய்த்துறையினரை மணல் திருடர்கள் உரிய முறையில் கவனித்து விடுவதால் மணல் திருட்டு குறித்து அவர்களும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்வதில்லை. இந்த மணல் திருட்டால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கல்குறிச்சி, ஆலங்குளம், கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. எனவே வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.