போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த வாலிபர் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த வாலிபர் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 July 2017 4:15 AM IST (Updated: 12 July 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த வாலிபர் இறந்ததையடுத்து அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி,

விழுப்புரத்தை அடுத்த கப்பியாம்புலியூர் கக்கன்தெரு பழைய காலனியை சேர்ந்தவர் துரைசிங்கம் (வயது 23). இவர் போலீஸ் நண்பர்கள் குழுவில் பணியாற்றி வந்தார். கடந்த 9–ந் தேதி இரவு கோலியனூர் ரெயில்வே கேட் அருகில் உள்ள தண்டவாளத்தில் துரைசிங்கம் உடல் சிதறிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று துரைசிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் துரைசிங்கத்தின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பதாக இருந்தது. அப்போது துரைசிங்கத்தின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீரென மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சப்–இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் விழுப்புரம் ரெயில்வே போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட துரைசிங்கத்தின் உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது துரைசிங்கத்தின் உறவினர்கள் கூறுகையில், துரைசிங்கத்தின் சாவில் சந்தேகம் இருப்பதால் முறையான விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று முறையிட்டனர்.

அதற்கு, இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, அவர்களிடம் துரைசிங்கத்தின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

இந்த திடீர் போராட்டத்தினால் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story