டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லையோர கிராமங்களில் கலெக்டர் ஆய்வு


டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு: தமிழக எல்லையோர கிராமங்களில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 July 2017 10:30 PM GMT (Updated: 2017-07-12T01:01:21+05:30)

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதால் தமிழக எல்லையோர கிராமங்களில் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி,

கேரளாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தமிழக எல்லையோர கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம், ராமபட்டிணம் ஆகிய கிராமங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:–

டெங்கு மற்றும் மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படுதல் மற்றும் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே மழைக்காலங்களில் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். கிராமப்புறங்களில் ஒவ்வொரு இடங்களாக பிரித்து கள ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் கொசு மருந்து தெளித்தல், அபேட் மருந்து ஊற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். நீண்டநாட்களாக தண்ணீர் தேக்கி வைக்காத வகையில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

டெங்கு பாதிப்பு உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பப்பாளி இலைச்சாறு, நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் ஒவ்வொரு பகுதிகளிலும் மருத்துவமுகாம் நடத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் நீங்களே மருந்து வாங்கி உட்கொள்ளாமல் முறையான சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் போதிய அளவு மருந்துகளும், அனைத்து வசதிகளும் உள்ளன. டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டால் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.

மேலும் உயர்சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கோ அல்லது அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சை பெற வேண்டும். மழைக்காலங்களில் பொதுசுகாதாரத்துறை, வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பத்மாவதி, தாசில்தார் செல்வி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து ராமபட்டிணம் மக்கள் கூறியதாவது:–

ராமபட்டிணத்தில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலெக்டர் ஆய்வுக்கு வருவதை அறிந்து சுகாதார பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். சாக்கடை கால்வாய் சுத்தம் செய்வதில்லை. குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை. குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் தண்ணீர் சேமித்து வைத்து தான் பயன்படுத்த வேண்டிய உள்ளது.

டெங்கு தடுப்பு பணிக்கு வரும் பணியாளர்கள் தண்ணீரை கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். இல்லையெனில் மருந்தை ஊற்றி விடுவதால் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை. மேலும் வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் குழாய் சாக்கடை கால்வாய் வழியாக செல்கிறது. இதனால் ஒரு சில நேரங்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. மேலும் பொதுசுகாதார வளாகம் இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது. எனவே அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story