பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2017 3:45 AM IST (Updated: 13 July 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் 65 கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று காலை கல்லூரிக்கு வந்தனர். இவர்கள் அனைவரும் காலை 10 மணியளவில் வகுப்பை புறக்கணித்து கல்லூரியை விட்டு வெளியே வந்தனர்.

தொடர்ந்து, இவர்கள் கல்லூரியின் நுழைவுவாயின் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மண்டலக்குழு தலைவர் ஆரிமுத்து, கிளை தலைவர் செல்வக்குமார், செயலாளர் முருகேசன், பொருளாளர் பச்சையப்பன் உள்பட கிளை பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்யும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என்றனர். இதேபோல் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றி வரும் 70 கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story