கூடலூரில் குறை தீர்ப்பு முகாமில் மொட்டை அடித்து கொண்டு உடலில் கோரிக்கைகளை எழுதி வந்து வாலிபர் மனு
கூடலூரில் நடந்த குறை தீர்ப்பு முகாமுக்கு மொட்டை அடித்து கொண்டு உடலில் கோரிக்கைகளை எழுதி வந்து வாலிபர் ஒருவர் மனு கொடுத்தார்.
கூடலூர்,
கூடலூர் ஜானகியம்மாள் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நேற்று பகல் 11 மணிக்கு நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. உழவர் பாதுகாப்பு திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டம், மருத்துவ காப்பீடு, அம்மா குடிநீர், மருந்தகம், தாலிக்கு தங்கம், மாணவ– மாணவிகளுக்கு இலவச சீருடைகள், பாடநூல்கள், மடிக்கணினிகள் வழங்கி வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் 3,788 பேருக்கு ரூ.1 கோடியே 1 லட்சம் செலவில் திருமண நிதியும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 15 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
கூடலூர் நகராட்சி மூலம் ரூ.7 கோடியே 45 லட்சம் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.33.34 லட்சம் செலவில் பள்ளிக்கூட கட்டிடங்கள் பராமரிக்கப்பட்டுள்ளன. பழங்குடியினருக்கு ரூ.95 லட்சம் செலவில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்னும் அதிக வளர்ச்சி பணிகள் நடைபெற இருக்கிறது. மக்களின் தேவைகளை அறிந்து கொள்வதற்காக இதுபோன்ற குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
ஆனால் இதுபோன்ற குறைதீர்ப்பு முகாமுக்கு மக்கள் குறைவாகவே வருகை தருகின்றனர். மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி தெரிவித்தால் மட்டுமே அதிகாரிகளுக்கு தெரியவரும். இதன் மூலம் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க முடியும். எனவே குறை தீர்ப்பு முகாமில் மக்கள் அதிகளவு கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் 17 பேருக்கு முதியோர் ஓய்வூதிய தொகையும், 12 பேருக்கு ரூ.48 லட்சத்து 26 ஆயிரம் வங்கி கடன் உதவியும், 72 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகளையும் (ரேஷன் கார்டு) கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து மேல்கூடலூரை சேர்ந்த பொன்னம்மாள் என்ற பெண்ணுக்கு விபத்து இழப்பீடு தொகை ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. பின்னர் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா 76 மனுக்களை வாங்கி அந்தந்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
முகாமின்போது ஓவேலி பேரூராட்சியை சேர்ந்த மணி (வயது 32) என்பவர் தனது தலையை மொட்டை அடித்து உடல் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை எழுதியவாறு குறை தீர்ப்பு முகாமுக்கு வந்தார். முடிவு செய்யப்படாத (பிரிவு–17) வகை நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஓவேலி சோதனைச்சாவடியை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல வாசகங்கள் உடல் முழுவதும் எழுதப்பட்டு இருந்தது.
இதைக்கண்ட போலீசார் உடனடியாக அந்த வாலிபரை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கோரிக்கைகளை மனுவாக எழுதினால் அதிகாரிகளை சந்திக்க விடுவதாக தெரிவித்தனர். இதையொட்டி அந்த வாலிபர் சட்டையை அணிந்து கொண்டு தனது கோரிக்கையை மனுவாக எழுதி அதிகாரிகளிடம் வழங்கினார். பின்னர் அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.