கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை மீட்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் மனு
பாடலீஸ்வரர்கோவிலுக்கு சொந்தமான சொத்துகள் முறைகேடாக விற்பனை மீட்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் மனு
கடலூர்,
இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் தலைமையில் மாநில செயலாளர் சாமிநாதன், புதுச்சேரி மாநில செயலாளர் அஞ்சனா, மாவட்ட தலைவர் தேவா மற்றும் நிர்வாகிகள் நேற்று கடலூர் பாடலீஸ்வரர்கோவில் செயல் அலுவலர் நாகராஜனை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
கடலூர் பாடலீஸ்வரர்கோவில் புகழ்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நகைகள், சொத்துகள் ஆகியவை ஆக்கிரமிப்பாளர்கள், சமூக விரோதிகள் மற்றும் பணக்காரர்கள் பிடியில் உள்ளது. கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் கோவில் நிர்வாகத்துக்கு தெரியாமலேயே முறைகேடாக, மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முறைகேடாக விற்பனை செய்த சொத்துகளை 15 நாட்களுக்குள் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பக்தர்கள், சிவனடியார்கள், பொதுமக்களை திரட்டி கோவில் சொத்துகளை மீட்கும் நடவடிக்கையை எடுப்போம்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.