ஆஸ்பத்திரியில் ஆணுறை பாக்கெட் இல்லாததால் தர்ணாவில் ஈடுபட்ட வாலிபர்


ஆஸ்பத்திரியில் ஆணுறை பாக்கெட் இல்லாததால் தர்ணாவில் ஈடுபட்ட வாலிபர்
x
தினத்தந்தி 12 July 2017 11:41 PM GMT (Updated: 12 July 2017 11:41 PM GMT)

துமகூருவில் அரசு ஆஸ்பத்திரியில் ஆணுறை பாக்கெட் இல்லாததால் வாலிபர் தர்ணாவில் ஈடுபட்டார்.

பெங்களூரு,

துமகூருவில் அரசு ஆஸ்பத்திரியில் ஆணுறை பாக்கெட் இல்லாததால் வாலிபர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் மருந்துக்கடையில் இருந்து ஊழியர்கள் ஆணுறை பாக்கெட் வாங்கி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரேயை சேர்ந்தவர் கணேஷ்(வயது 31). இவர், துமகூரு மாவட்டத்தில் தங்கி கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், துமகூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று கணேஷ் சென்றார். பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம் தனக்கு ஆணுறை பாக்கெட் வேண்டும் என்று கேட்டார். உடனே அந்த ஊழியர்கள் ஆணுறை பாக்கெட்டுகள் தற்போது இருப்பு இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அரசு ஆஸ்பத்திரிகளில் கட்டாயம் ஆணுறை பாக்கெட்டுகள் வைத்திருக்க வேண்டும் என்று விதிமுறை இருப்பதாகவும், அதனால் தனக்கு கட்டாயம் ஆணுறை பாக்கெட் வேண்டும் என்றும் ஊழியர்களிடம் தொடர்ந்து கணேஷ் கேட்டுக் கொண்டே இருந்தார். அப்போது ஊழியர்கள், மாலையில்தான் டாக்டர் வருவார், அவருக்கு தான் ஆஸ்பத்திரியில் ஆணுறை பாக்கெட்டுகள் உள்ளதா? இல்லையா? என்று தெரியும் என ஊழியர்கள் சொல்லியதாக தெரிகிறது. இதனால் ஆஸ்பத்திரியில் ஆணுறை பாக்கெட்டுகள் இல்லை என்பதை கணேஷ் அறிந்து கொண்டார்.

இந்த நிலையில், அரசு ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து கொண்டு தனக்கு ஆணுறை பாக்கெட் வேண்டும் என்று கோரி கணேஷ் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் ஊழியர்கள், ஆஸ்பத்திரியில் இருந்து எழுந்து செல்லும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் செய்வது அறியாது திகைத்த ஊழியர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருந்துக்கடைக்கு சென்று ஆணுறை பாக்கெட்டுகள் வாங்கி வந்து கணேசிடம் கொடுத்தார்கள். பின்னர் அந்த பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரியில் இருந்து அவர் புறப்பட்டு சென்றார்.

இதுபற்றி கணேஷ் கூறுகையில், “அரசு ஆஸ்பத்திரிகளில் கண்டிப்பாக ஆணுறை பாக்கெட்டுகள் இலவசமாக கொடுக்கப்பட வேண்டும். அதனால் தான் இங்கு வந்து ஆணுறை பாக்கெட் கொடுக்கும்படி கேட்டேன். இந்த ஆஸ்பத்திரியில் ஆணுறை பாக்கெட் இல்லை என்று கூறியதால் தர்ணாவில் ஈடுபட்டேன். இந்த ஆஸ்பத்திரியில் ஆணுறை பாக்கெட்டுகளே இல்லை, அப்படி இருக்க மற்ற நோய்களுக்கான மருந்துகளை வைத்திருப்பார்களா? என்பது தெரியவில்லை’’ என்றார்.


Next Story