அரக்கோணம்–திருத்தணி நெடுஞ்சாலையில் பாலம் சீரமைப்பு பணி


அரக்கோணம்–திருத்தணி நெடுஞ்சாலையில் பாலம் சீரமைப்பு பணி
x
தினத்தந்தி 13 July 2017 5:31 AM IST (Updated: 13 July 2017 5:31 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் பெய்த பலத்த மழையால் திருத்தணி செல்லும் சாலையில் பாலம் சீரமைப்பு பணி நடந்த இடத்தில் மழை வெள்ளம் தேங்கியது.

அரக்கோணம்,

அரக்கோணத்தில் பெய்த பலத்த மழையால் திருத்தணி செல்லும் சாலையில் பாலம் சீரமைப்பு பணி நடந்த இடத்தில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தவிப்புக்குள்ளாயினர்.

அரக்கோணம் நகர சாலைகளில் முக்கிய சாலையாக திருத்தணி சாலை திகழ்கிறது. இந்த வழியாக தினமும் ஆந்திரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வடமாம்பாக்கம் மேம்பாலம் அருகே சாலையின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.

இந்த பாலத்தை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கின. இதற்காக சாலையின் குறுக்கே உள்ள பாலத்தை சரிசெய்ய சாலையை துண்டித்து பணிகள் நடந்தன.

வாகனங்கள், பாலம் கட்டும் இடத்தின் அருகே வயல் வழியாக சென்று வந்தன. இந்த வழியாக மோட்டார் சைக்களில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அரக்கோணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. தற்போது பாலம் சீரமைப்பு பணிகள் நடந்து வரும் பகுதியில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன.

வயல் வழியாக சென்ற கனரக வாகனங்கள் மண்ணில் சிக்கி கொண்டது. இதனால் அரக்கோணம்–திருத்தணி சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தண்ணீரில் விழுந்து எழுந்து சென்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் அந்த வழியாக செல்ல முடியாமல் தவிப்புக்குள்ளாயினர்.

தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை பொறியாளர் மதனமுஷாபர், போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், அண்ணாத்துரை, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கனி ஆகியோர் அங்கு சென்று போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தேங்கி இருந்த மழை நீரை அப்புறப்படுத்த அந்த பகுதியில் மண் கொட்டப்பட்டது.

மேலும் மோட்டார் சைக்கிள்கள் செல்ல அந்த பகுதியில் ஒரு தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. பின்னர் கனரக வாகனங்கள் ஒருபுறமாகவும், மோட்டார் சைக்கிள்கள் மற்றொரு புறமாகவும்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் போக்குவரத்தை சரிசெய்ய தேவையாக நடவடிக்கைகளை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.

Next Story