ரூ.8 லட்சம் மதிப்பிலான போதைபொருள் பறிமுதல்
ரூ.8 லட்சம் மதிப்பிலான போதை பொருளை ஆம்பூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவைத்து அழித்தனர்.
ஆம்பூர்
ஓசூரில் இருந்து வேலூருக்கு அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான போதை பொருளை ஆம்பூரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவைத்து அழித்தனர்.
ஆம்பூரில் உணவக உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொள்ள உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவளர் டாக்டர் வெங்கடேசன், ஆம்பூர் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கிய பிரபு ஆகியோர் வந்தனர்.அவர்கள் பஸ் நிலையத்துக்கு வந்தபோது ஓசூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அரசு பஸ் அங்கு வந்து நின்றது. அந்த பஸ்சின் மேற்கூரையின் மீது 8 பண்டல்கள் இருந்தன. சந்தேகத்தின் பேரில் அதனை இறக்கிப்பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக ‘ஹான்ஸ்’ எனப்படும் போதைபொருள் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து, அரசு பஸ் டிரைவரிடம் விசாரித்தனர்.
அப்போது பஸ் டிரைவர், ‘‘ஓசூரில் பண்டல்கள் ஏற்றப்பட்டு, வேலூரில் இறக்க வேண்டும் என தகவல் தெரிவித்தனர். வேறு எந்த சீட்டும் தரவில்லை’’ என கூறினார். அதைத்தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை ஆம்பூர் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் அவர்கள் தீ வைத்து எரித்தனர்.
ஆம்பூர் பஸ் நிலையத்தில் இருந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்ற சிறிது நேரத்தில் ஓசூரில் இருந்து வந்த மற்றொரு அரசு பஸ்சிலும் அதேபோல் பண்டல்கள் ஏற்றப்பட்டிருந்தன. இதுகுறித்து பொதுமக்கள் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் பஸ் நிலையத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்கு முன்பே அந்த பஸ் வேலூருக்கு புறப்பட்டு சென்று விட்டது. உடனே அதிகாரிகள் பஸ் எண்ணை குறிப்பிட்டு வேலூரில் சோதனையிட் உத்தரவிட்டனர்.இது போன்று அரசு பஸ்களில் பலமுறை போதைபொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் இந்த சம்பவவ்தில் தொடர்புடையைவர்களை கைது செய்து விசாரிக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.