இட்டமொழி அருகே டிராக்டர்–மினி லாரி மோதல்: தாய்–மகள் உள்பட 3 பேர் படுகாயம்
இட்டமொழி அருகே டிராக்டர்–மினி லாரி மோதிக் கொண்ட விபத்தில் தாய்–மகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இட்டமொழி,
இட்டமொழி அருகே டிராக்டர்–மினி லாரி மோதிக் கொண்ட விபத்தில் தாய்–மகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பிரிட்ஜ் வாங்குவதற்குதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (வயது 45). லாரி டிரைவர். இவருடைய மனைவி சுதா செல்வி (44). மகள் மெர்லின் (20). இவர்கள் 3 பேரும் ஒரு மினி லாரியில் சங்கரன்குடியிருப்பில் இருந்து நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பிரிட்ஜ் வாங்குவதற்காக நேற்று முன்தினம் இரவில் வந்தனர். அங்குள்ள கடையில் பிரிட்ஜ் வாங்கி விட்டு, மினி லாரியில் 3 பேரும் ஊருக்கு திரும்பினார்கள்.
மினி லாரியை சங்கரன்குடியிருப்பை சேர்ந்த முரளி (28) என்பவர் ஓட்டினார். மினி லாரியின் முன் பகுதியில் சுதா செல்வி, மெர்லின் ஆகியோர் இருந்தனர். பின்னால் நின்றபடி பிரிட்ஜை பிடித்துக் கொண்டு சுதாகர் வந்தார். இரவு 11 மணி அளவில் இட்டமொழி அருகே உள்ள வாகைநேரி பகுதியில் மினி லாரி வந்து கொண்டு இருந்தது.
தாய்–மகள் காயம்அப்போது, எதிரே தண்ணீர் ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மினி லாரியும், டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மினி லாரியின் முன் பகுதியில் அமர்ந்து இருந்த சுதா செல்வி, மெர்லின், டிரைவர் முரளி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சுதா செல்வி, மெர்லின் ஆகியோர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.