மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்


மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 14 July 2017 4:45 AM IST (Updated: 14 July 2017 3:43 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவளுடைய தாய் இறந்துவிட்டார். மாணவியையும், அவளுடைய அக்காளையும் விட்டு தந்தை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் 2 சிறுமிகளும் பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.

கடந்த 11-7-2016 அன்று சத்தியமங்கலம் அருகே ரங்கசமுத்திரத்தில் உள்ள ஒரு உறவினர் பெண்ணின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு 2 சிறுமிகளையும் பாட்டி தன்னுடன் அழைத்து சென்றார். நிகழ்ச்சி முடிந்த பிறகு வளைகாப்பு நடத்தப்பட்ட கர்ப்பிணியை அவருடைய தாய் வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக மாணவியின் பாட்டி சென்றார். இதனால் மாணவியும், அவளுடைய அக்காளும் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த வீட்டின் வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ரங்கசமுத்திரம் கோபால்லைன் பகுதியை சேர்ந்த தொழிலாளியான சின்னான் (வயது 46) என்பவர், விளையாடிக்கொண்டு இருந்த மாணவியை கடத்தி மறைவான இடத்திற்கு கொண்டு சென்றார். அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்நேரம் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் மாணவியிடம் அவர், ‘நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கழுத்தை அறுத்து கொன்று ஆற்றில் வீசிவிடுவேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பாட்டியிடம் கூறினாள்.

இதுகுறித்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னானை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி திருநாவுக்கரசு நேற்று தீர்ப்பு கூறினார். அதில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக சின்னானுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்தார். மேலும் மாணவியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்ததால், சின்னானுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி திருநாவுக்கரசு பரிந்துரை செய்து உள்ளார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் துரைசக்திவேல் ஆஜரானார். ஜெயில் தண்டனை பெற்ற சின்னானுக்கு பார்வை தெரியாத மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் ஒரு மகன் இறந்துவிட்டார்.


Related Tags :
Next Story