மாநகராட்சி சார்பில் இயற்கை உரம் விற்பனை மையம்
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் மாநகராட்சியில் தயாரிக்கப்படும் இயற்கை உரம் விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
வேலூர்,
வேலூர் பழைய பஸ்நிலையத்தில் மாநகராட்சியில் தயாரிக்கப்படும் இயற்கை உரம் விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி கமிஷனர் திறந்துவைத்தார்.
வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. நிர்வாக வசதிக்காக தலா 15 வார்டுகளுக்கு ஒரு மண்டலம் என மொத்தம் 4 மண்டலங்களாக மாநகராட்சி பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் சேர்ந்து வருகிறது. இந்த குப்பைகள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டு, வேலூரை அடுத்த சதுப்பேரியில் கொட்டப்பட்டு வந்தது. குப்பைகள் கொட்டுவதால், அந்த பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசு அடைவதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, வார்டுகள் வாரியாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்படுகின்றன. மக்கும் குப்பைகள் இயற்கை உரமாக்கப்படுகிறது. மாட்டு சாணம், மண்புழு போன்றவற்றுடன் மக்கும் குப்பைகளை கொட்டி, விவசாயத்திற்கு ஏற்ப பதப்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை விற்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன்படி வேலூர் மாநகராட்சி 2–வது மண்டலம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இயற்கை உரம் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உரம் விற்பனை மைய திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை மாநகராட்சி கமிஷனர் குமார் திறந்து வைத்து இயற்கை உரம் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:–மாநகராட்சியில் 34 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும், மக்காத குப்பைகள் என்று தரம் பிரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக், டயர், ரப்பர் போன்ற மக்காத குப்பைகளை தரம் பிரித்து மீண்டும் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படுகிறது. மக்கும் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் மாநகராட்சியில் தான் சேகரிக்கப்படும் குப்பைகள் உரமாக மாற்றப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
2–வது மண்டலத்தில் சுமார் 70 டன் மக்கும் குப்பைகள் உள்ளன. இதனையும் இயற்கை உரமாக மாற்றி விற்பனைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இயற்கை உரம் விற்பனை செய்வதற்கான உரிமமும் பெறப்பட்டுள்ளது. 1 கிலோ இயற்கை உரம் ரூ.5–க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் டன் கணக்கில் உரம் வாங்கி செல்லலாம். விவசாயிகளுக்காக 1 டன் இயற்கை உரம் ரூ.1,000–க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மற்றும் விவசாயிகள் குறைத்தீர்வு நாளின் போது இயற்கை உரம் விற்பனை மையம் அமைக்கப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.