குடிநீர் குழாய் இணைப்பை அதிகாரிகள் துண்டிக்க முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


குடிநீர் குழாய் இணைப்பை அதிகாரிகள் துண்டிக்க முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 July 2017 4:00 AM IST (Updated: 15 July 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே ஈங்கூரில் குடிநீர் குழாய் இணைப்பை அதிகாரிகள் துண்டிக்க முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னிமலை,

பெருந்துறையில் இருந்து ஈங்கூர் வழியாக சென்னிமலைக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த திட்டம் மூலம் ஈங்கூர் பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் அங்கு 4 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 12–ந் தேதி சென்னிமலை அருகே மேலப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி சுமார் 3 மணி நேரம் சாலை மறியல் செய்தனர்.

இந்தநிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக உதவி பொறியாளர் லலிதா தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை 9.30 மணி அளவில் ஈங்கூருக்கு வந்தனர். அங்கு சென்னிமலைக்கு செல்லும் பிரதான காவிரி குடிநீர் குழாயில் இருந்து ஈங்கூர் பகுதி மக்களுக்கு செல்லும் குடிநீர் குழாய் இணைப்பை துண்டிக்க முயன்றனர். இதற்காக ஈங்கூர் பஸ் நிறுத்தம் அருகில் குழி தோண்டப்பட்டது.

ஈங்கூர் பகுதிக்கான குடிநீர் இணைப்பை துண்டிக்க அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 100 பேர் காலை 10 மணிஅளவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறியதாவது:–

கடந்த 40 ஆண்டுகளாக ஈங்கூர் பகுதிக்கு சென்னிமலைக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில் இருந்துதான் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எங்களுக்கு வீட்டு இணைப்புகள் எதுவும் கிடையாது. 4 இடங்களில் பொது குடிநீர் குழாய்கள் மட்டுமே உள்ளன. இதில்தான் ஈங்கூர், செங்குளம், வெட்டுக்காட்டுவலசு, கவுண்டனூர், குட்டப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து சைக்கிளில் வந்து குடங்களில் தண்ணீர் பிடித்து செல்கிறோம்.

சிப்காட் சாய கழிவுகளால் ஈங்கூர் ஊராட்சியில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் சுகாதாரமில்லாமல் ஆகிவிட்டது. அதனால் குடிப்பதற்கு இதைவிட்டால் வேறு வழியில்லை. தற்போது சிப்காட் பகுதியிலும் ஏராளமான தொழிலாளர்கள் வசிப்பதால் குடிநீர் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் அதற்கான வசதிகள் எங்களுக்கு செய்யப்படவில்லை. இந்தநிலையில் இப்போது உள்ள இந்த காவிரி குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டால் ஊரிலேயே வசிக்க முடியாத நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து குடிநீர் இணைப்பை துண்டிக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களும் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் சுமார் 20 நிமிடம் சென்னிமலை–பெருந்துறை ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story