போலீசார் துன்புறுத்துவதாக கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி
போலீசார் துன்புறுத்துவதாக கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி, தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறையூர்,
மறையூர் பத்தடிபாலத்தை சேர்ந்தவர் சஞ்சு (வயது 34). இவருக்கும், அவருடைய மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்களுக்கிடைய தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் சஞ்சு, மனைவியை தாக்கினார்.
இதில் காயம் அடைந்த அவர், மறையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சுவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் சஞ்சு திடீரென அந்த பகுதியில் 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூச்சல் போட்டார். இதனால் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மறையூர் பஞ்சாயத்து தலைவர் ஜோமோன், கிராம நிர்வாக அதிகாரி ஜார்ஜ்பவுலோஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் சஞ்சுவின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு கீழே இறங்கும்படி வலியுறுத்தினர்.
அப்போது அவர், விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும், என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்றால் மட்டுமே கீழே இறங்குவேன் என்றார். உடனே போலீசார், வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர் கீழே இறங்கி வந்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.