நிரந்தரமாக மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடையை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


நிரந்தரமாக மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடையை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 15 July 2017 4:30 AM IST (Updated: 15 July 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொது மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.கடை மூடப்பட்டதால் மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மலைக்கோட்டை,

தமிழகம் முழுவதும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடியது. இவ்வாறு மூடப்பட்ட கடைகள் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்காத, பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத இடங்களில் திறக்கப்பட்டு வருகிறது.

அதே போன்று திருச்சி தேவதானம் பகுதியில் உள்ள காவிரி ரோட்டில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த கடையை மூட வலியுறுத்தியும், மேலும் அதே பகுதியில் இருந்து சிறிது தொலைவில் புதிதாக 2 கடைகள் திறக்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுமக்கள் திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தேவதானம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்படாத நிலையில், அந்த கடைக்கு மிக அருகிலேயே மற்றொரு டாஸ்மாக் கடையை கடந்த மாதம் புதிதாக திறந்தனர். இதனால் அந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதாக கூறியும் நேற்று காலை அந்த பகுதி பொதுமக்கள் மீண்டும் அங்குள்ள 2 டாஸ்மாக் கடைகளையும் நிரந்தரமாக மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். பின்னர் அந்த டாஸ்மாக் கடைமுன்பு தரையில் அமர்ந்து டாஸ்மாக்கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் பற்றி தகவலறிந்து கோட்டை சரக போலீஸ் உதவி கமி‌ஷனர் சீனிவாச பெருமாள் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திருச்சி கிழக்கு தாசில்தார் சத்தியமூர்த்தி, டாஸ்மாக் உதவி மேலாளர் மெர்ஜியானா மற்றும் அதிகாரிகளும் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அவர்கள் சமாதானம் அடையவில்லை.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மீண்டும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில் இன்று காலை 10 மணியளவில் திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் தேவதானம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 10 பேரும், டாஸ்மாக் அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் மூலம் நிரந்தர தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். அதுவரை டாஸ்மாக்கடையை திறக்க கூடாது என்று பொதுமக்கள் கூறியதால் அதிகாரிகள் நேற்று ஒரு நாள் இந்த பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை திறக்காமல் விடுமுறை விட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த முற்றுகை போராட்டம் நேற்று காலை 11 மணியளவில் தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது. ஒரு பக்கம் கடையை மூடக்கோரி போராட்டம் நடந்தாலும் மறு பக்கம் மது வாங்க ஏராளமான மது பிரியர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுக் கடைக்கு விடுமுறை விடப்பட்ட தகவல் தெரிந்ததும் மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பின்னர் சிறிது நேரம் காத்திருந்து விட்டு வேறு கடைகளுக்கு சென்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.


Next Story