பெண் கைதி கொலை வழக்கில் கைதான ஜெயிலர், சிறைக்காவலர்கள் சிறையில் அடைப்பு
மும்பை பைகுல்லா சிறையில் மஞ்சுளா என்ற பெண் கைதி அடித்து கொலை செய்யப்பட்டார். சிறை அதிகாரிகளால் அவர் உடல் ரீதியாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மும்பை,
மும்பை பைகுல்லா சிறையில் மஞ்சுளா என்ற பெண் கைதி அடித்து கொலை செய்யப்பட்டார். சிறை அதிகாரிகளால் அவர் உடல் ரீதியாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே அவரை துன்புறுத்திய ஜெயிலர் மனிஷா, சிறை காவலர்கள் பிந்து, வாசிமா சேக், சீத்தல், சுரேக்கா, ஆர்த்தி ஆகிய 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ஆறு பேரையும் கைது செய்தனர். போலீசார் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். அவர்களது போலீஸ் காவல் முடிந்ததையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸ் தரப்பில் 2 நாட்கள் போலீஸ் காவலை நீட்டிக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் எதிர் தரப்பு வக்கீல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி 6 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் தானே மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.