மிரா – பயந்தர் மாநகராட்சிக்கு ஆகஸ்ட் 20–ந் தேதி தேர்தல்
மிரா – பயந்தர் மாநகராட்சிக்கு ஆகஸ்ட் 20–ந் தேதி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
மும்பை
தானே மாவட்டத்தில் உள்ள மிரா–பயந்தர் மாநகராட்சி தற்போது பா.ஜனதா–சிவசேனா கூட்டணி வசம் உள்ளது. இதன் ஆட்சி காலம் ஆகஸ்ட் 27–ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் மிரா–பயந்தர் மாநகராட்சி தேர்தல் ஆகஸ்ட் 20–ந் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து நேற்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:–மிரா–பயந்தர் மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 26–ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2–ந் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஆகஸ்ட் 3–ந் தேதி நடைபெறும். 5–ந் தேதி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள். 6–ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஆகஸ்ட் 20–ந் தேதி காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 21–ந் தேதி காலை தொடங்கி மாலை முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.மிரா – பயந்தர் மாநகராட்சி 95 வார்டுகளை கொண்டது ஆகும். இதில் 48 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 5 லட்சத்து 93 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
மிரா – பயந்தர் மாநகராட்சியில் தற்போது கட்சிகளின் பலம் பா.ஜனதா – 29, தேசியவாத காங்கிரஸ் – 27, காங்கிரஸ் – 19, சிவசேனா – 14, இதரகட்சிகள் – 4, நவநிர்மாண் சேனா – 1, சுயேட்சை – 1.கடந்த தேர்தலில் பாஜனதா – சிவசேனா, காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது பா.ஜனதா – சிவசேனா கூட்டணி, காங்கிரஸ் கூட்டணியை விட குறைவாக இடங்களில் வெற்றி பெற்ற போதும் சுயேட்சை மற்றும் இதர கட்சிகளில் ஆதரவுடன் மாநகராட்சியை கைப்பற்றி இருந்தது. இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிடவே அதிக வாய்ப்பு உள்ளது. எனவே வர இருக்கும் மிரா – பயந்தர் மாநகராட்சி தேர்தலில் கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது.