ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை கொள்ளை


ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை கொள்ளை
x
தினத்தந்தி 16 July 2017 4:31 AM IST (Updated: 16 July 2017 4:31 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை உதவி மேலாளர் வீட்டில் 48 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிகால் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் வேடி (வயது 59). இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் உதவி மேலாளராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் ரேகா. இவர் திருமணம் முடிந்த நிலையில் சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். ரேகா தனது 48 பவுன் நகைகளை தந்தை வீட்டில் கொடுத்து வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேடியும், அவரது மனைவி செல்வியும் மகளுக்கு ஆடி சீர்வரிசை கொடுப்பதற்காக சென்னைக்கு சென்றிருந்தனர். நேற்று காலை அவர்கள் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு திரும்பினர்.

வீட்டிற்கு வந்தபோது முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு வேடி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 48 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.

இது குறித்து வேடி திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வேடியின் வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வந்து மர்மநபர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story