பரங்கிமலையில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் ஆசிரியர் பரிதாப சாவு
பரங்கிமலை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஆசிரியர் பரிதாபமாக இறந்தார். விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் வந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது40). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு பரங்கிமலையில் தபால் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள சிக்னல் வளைவில் திரும்பினார்.
அப்போது மீனம்பாக்கம் நோக்கி வேகமாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆசிரியர் ரமேஷ் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கல்லூரி மாணவர்கள் சூரியநாராயணன்(20), சீனிவாசன்(20) ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ஆதம்பாக்கம் கக்கன் நகரில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் மர்ம ஆசாமி புகுந்து திருட முயன்றதை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து விரட்டிச்சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சாரதி(32) என்பது தெரியவந்தது.
* கிண்டி மடுவாங்கரை பகுதியில் உள்ள மதுபானக்கடையில் மதுவாங்க நின்ற குரோம்பேட்டையை சேர்ந்த ஜெயசுபின் என்பவரது செல்போனை திருடியதாக கொருக்குப்பேட்டையை சேர்ந்த முரளி(24) கைது செய்யப்பட்டார்.
* ஆலந்தூர் கண்ணன்காலனியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக பாண்டியன்(48) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
* மண்ணிவாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரீகன் ரொசாரியோ(25) மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றபோது அந்த வழியாக வந்த பஸ் மோதியதில் பலியானார். டிரைவர் நாகமணி(54) கைது செய்யப்பட்டார்.
* சென்னை அண்ணாநகரில் தங்கி கணினி பயிற்சி படித்து வரும் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த பரோமித்ரா(27) அந்த பகுதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அவரது கைப்பையை பறித்து சென்றனர். அதில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் இருந்தது.
* கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள தனியார் லாரி சர்வீஸ் நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தியபோது பாலாஜி(39) என்பவர் தடை செய்யப்பட்ட ரூ.33 ஆயிரம் மதிப்புள்ள பான்மசாலாவை வெளியூருக்கு அனுப்ப முயன்றது தொடர்பாக, அவரை போலீசார் கைது செய்தனர்.