தூத்துக்குடி மாநகராட்சியில் பக்கிள் ஓடை சுத்தப்படுத்தும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பக்கிள் ஓடை சுத்தப்படுத்தும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள பக்கிள் ஓடையில் குப்பைகள் தேங்கி தண்ணீர் வெளியேறாமல் இருந்தது. இதை தொடர்ந்து ஓடையில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ், என்ஜினீயர் ரூபன்சுரேஷ் பொன்னையா, சுந்தர்ராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட அ.தி.மு.க. (அம்மா அணி) செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:–
தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள பக்கிள் ஓடை 7.28 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 7 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரை ஆழமும் கொண்டது. இந்த ஓடையில் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரை 3 கிலோ மீட்டர் தூரம் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. பக்கிள் ஓடையை தூய்மையாக பாதுகாப்பதற்காக நிரந்தர தீர்வு காணப்பட உள்ளது. இதற்காக ஓடையின் இருபுறமும் குப்பைகளை கொட்டாத வகையில் குப்பை தொட்டிகள் வைக்கப்படும். மீறி குப்பைகள் கொட்டுபவர்களை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
திரேஸ்புரம் கடற்கரையில் இந்த கழிவுநீர் கலந்து வருகிறது. அந்த பகுதியில் தண்ணீர் தேங்காத வகையில் கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டு வருகிறது. இந்த பணி 2 வாரத்தில் முடிவடையும். தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார வளர்ச்சியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு பாராட்டுக்கு உரியது. பொதுமக்கள் எப்போதும் மாநகராட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பொதுமக்கள் பக்கிள் ஓடையில் குப்பைகள் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.