நாக்பூரில் திரைப்பட நிகழ்ச்சியை ரத்து செய்தார், மதுர் பண்டர்கர்
காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்ப்பை தொடர்ந்து, நாக்பூரில் நடைபெற இருந்த திரைப்பட நிகழ்ச்சியை இயக்குனர் மதுர் பண்டர்கர் ரத்து செய்தார்.
நாக்பூர்,
காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்ப்பை தொடர்ந்து, நாக்பூரில் நடைபெற இருந்த திரைப்பட நிகழ்ச்சியை இயக்குனர் மதுர் பண்டர்கர் ரத்து செய்தார். இது தொடர்பாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்திக்கு சரமாரி கேள்வி எழுப்பினார்.
பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் மதுர் பண்டர்கரின் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ‘இந்து சர்கார்’. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் புனேயில் நடைபெறுவதாக இருந்தது. இந்த படத்தில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியையும், அவரது மகன் சஞ்சய் காந்தியையும் தவறாக சித்தரித்து காட்டியிருப்பதாக கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், புனேயில் நடைபெற இருந்த திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து, நேற்று நாக்பூரில் இயக்குனர் மதுர் பண்டர்கர் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன்பின்னர், இந்து சர்கார் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையறிந்த நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள், மதுர் பண்டர்கர் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த அரங்கம் முன்பு திரண்டு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல் முன்பு திரண்டு அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, செய்தியாளர்கள் சந்திப்பையும், திரைப்பட விழாவையும் ரத்து செய்த மதுர் பண்டர்கர், தங்கியிருந்த ஓட்டலை விட்டும் வெளியேறினார்.அத்துடன், டுவிட்டரில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிட்டு ஒரு கருத்தை பதிவு செய்தார்.
அதில், ‘‘புனேயை தொடர்ந்து நாக்பூரிலும் செய்தியாளர்கள் சந்திப்பை நான் ரத்து செய்துவிட்டேன். காங்கிரஸ் தொண்டர்களின் இந்த சமூக விரோத செயலை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?. என்னுடைய கருத்து சுதந்திரத்தை நான் பெற்று கொள்ளலாமா?’’ என்று சரமாரியாக கேள்வி விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அதுல் லோந்தே கூறுகையில், ‘‘மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எந்த செயலையும் மக்கள் ஏற்க மாட்டார்கள். படத்தில் எதையும் மறைக்கவில்லை என்றால், அதை காங்கிரஸ் தலைவர்களுக்கும், காந்தி குடும்ப உறுப்பினர்களுக்கும் முதலில் திரையிட்டு காட்டியிருக்க வேண்டும்’’ என்றார்.
காங்கிரஸ் தொண்டர்களின் எதிர்ப்பால், இயக்குனர் மதுர் பண்டர்கரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது நாக்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.