கல்லூரி, பள்ளி செல்வதற்கு உரிய நேரத்திற்கு பஸ் வராததை கண்டித்து மாணவ–மாணவிகள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
கல்லூரி, பள்ளிக்கு செல்வதற்கு உரிய நேரத்திற்கு பஸ் வராததை கண்டித்து தா.பழூரில் மாணவ–மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள் உள்ளன. இங்கிருந்து மதனத்தூர், நீலத்தநல்லூர் கொள்ளிட பாலம் வழியாக கும்பகோணம் செல்வதற்கு பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது. மேலும் தா.பழூர், காரைக்குறிச்சி, சிந்தாமணி, கோடங்குடி, இடங்கண்ணி, அடிக்காமலை, தாதம்பேட்டை, அண்ணகாரன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்களில் இருந்து 200–க்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கும்பகோணத்திற்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், வணிகர்கள் கொள்முதல் செய்வதற்கும், இதர பயணிகள் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கும் கும்பகோணம் நகர் பகுதி, தா.பழூர் பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்நிலையில் தா.பழூரில் இருந்து கும்பகோணம் செல்லும் அரசு பஸ்கள் சரிவர வருவதில்லை எனக்கூறப்படுகிறது. அதிலும் கல்லூரி, பள்ளி மாணவ– மாணவிகள் நலன் கருதி காலை 7 மணிக்கு வரும் அரசு பஸ் சரியான நேரத்திற்கு வராமல் கால தாமதமாக வருகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு அவர்களால் கல்லூரி, பள்ளிக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இதுகுறித்து சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மாணவ–மாணவிகள் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரி, பள்ளிக்கு செல்வதற்காக தா.பழூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்தனர். காலை 7 மணிக்கு வர வேண்டிய பஸ் 8 மணியாகியும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி, பள்ளி மாணவ–மாணவிகள் தா.பழூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ– மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையடுத்து மாணவ–மாணவிகளிடம் உரிய நேரத்திற்கு பஸ் வருவதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்றும், தற்போது தற்காலிகமாக பஸ் வருவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதியளித்தார். இதையடுத்து மாணவ–மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் தா.பழூர் சாலையில் சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது:–
தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 100–க்கும் மேற்பட்ட மாணவிகள் கும்பகோணத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி, பள்ளிகளில் பயின்று வருகிறோம். நாங்கள் தினமும் காலை 7 மணிக்குள் தா.பழூருக்கு வந்து பஸ்சுக்காக காத்து நிற்கிறோம். அப்போது வரும் பஸ்சில் மாணவர்கள், பயணிகளுடன் நாங்களும் நெருக்கடியுடன் பஸ்சில் பயணிக்க வேண்டிய உள்ளது. எனவே மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி நேரத்திற்கு கூடுதல் பஸ் இயக்கினால் எங்கள் சிரமம் குறையும் என்று கூறினர்.