அய்யூர் வனப்பகுதியில் இருந்து வழித்தவறி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை
அய்யூர் வனப்பகுதியில் இருந்து வழித்தவறி கிராமத்திற்குள் காட்டு யானை நேற்று புகுந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அய்யூர் காப்பு காட்டில் யானைகள் உள்ளன. இந்த நிலையில் அங்கிருந்து ஒரு ஒற்றை ஆண் யானை வழித்தவறி நேற்று காலை 8 மணி அளவில் உனிசெட்டி கிராமம் வழியாக குருபட்டி, நெமிலேரி கிராமங்களுக்குள் வந்தன.
இந்த நிலையில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு கிராம மக்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது ஒற்றை யானை ஒன்று ஆக்ரோஷமாக நடுரோட்டில் சுற்றிக் கொண்டிருந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக இது குறித்து தேன்கனிக்கோட்டை வனச்சரகர் ஆறுமுகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவருடைய தலைமையில் வனப்பாதுகாவலர் முனிராஜ், வேட்டை தடுப்பு குழுவினர் மற்றும் வனக்குழுவினர் ஒற்றை யானை உள்ள பகுதிக்கு வந்தனர். அவர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டை அடித்தும் யானையை விரட்டினார்கள். இதைத் தொடர்ந்து யானை நெமிலேரி கிராமத்தின் அருகில் ஏரியையொட்டி உள்ள புதரில் தஞ்சம் அடைந்தது.
அந்த யானையை காப்பு காட்டிற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் யாரும் நெமிலேரி ஏரி பக்கமாக செல்ல வேண்டாம் என்றும் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.