கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக நாகையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. கடந்த மாதம் 30–ந்தேதி எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டது. அதைதொடர்ந்து கதிராமங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கச்சா எண்ணெய் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து கடந்த 1–ந்தேதி முதல் கதிராமங்கலம் பொதுமக்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கதிராமங்கலத்தில் போராடும் மக்களுக்கு ஆதரவாக நாகையை அடுத்த புத்தூரில் உள்ள பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜோதிபாசு, மாவட்ட துணை தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட 10 பேரை உடனே விடுவிக்க வேண்டும். கதிராமங்கலத்தில் எண்ணெய் கசிவால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கதிராமங்கலத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீசார் உடனே வெளியேற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அரசு நடவக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் விஜயேந்திரன், ஸ்டாலின், ரமணி உள்பட 500–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.