வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி


வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
x
தினத்தந்தி 19 July 2017 3:15 AM IST (Updated: 19 July 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியினை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

விருதுநகர்

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

சிவகாசியில் கடந்த 20.10.2016–ல் பட்டாசு ஆலையில் நடைபெற்ற வெடி விபத்தின்போது அருகில் இருந்த தனியார் ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்த திருத்தங்கலை சேர்ந்த மருத்துவர் ஜானகிராம், வெம்பக்கோட்டை நதிக்குடியை சேர்ந்த பாஸ்கர், சிவகாசி ஆனையூரை சேர்ந்த காமாட்சி மற்றும் புஷ்பலட்சுமி, சிவகாசியை சேர்ந்த வளர்மதி மற்றும் பத்மலதா, சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்த சொர்ணகுமாரி மற்றும் தேவி, சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த ராஜா ஆகியோர் இறந்தனர்.

வெடி விபத்தில் பலியான இவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதியாக ஒரு நபருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் 9 பேருக்கு ரூ.18 லட்சத்திற்கான காசோலைகளையும், மேலும் இந்த வெடி விபத்தில் காயமடைந்த 15 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.68 ஆயிரத்து 400 மதிப்பிலான இலவச சலவைப் பெட்டிகளையும் அவர் வழங்கினார்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) அன்புநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் செந்தில் ஆறுமுகம் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story