குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மண்டல அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மண்டல அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 July 2017 4:00 AM IST (Updated: 19 July 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை ஆணையாளர் சமரசம் செய்தார்.

மதுரை,

மதுரை மாநகராட்சி மண்டலம்–3 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அதில் மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர், துணை ஆணையாளர் மணிவண்ணன், நகர் பொறியாளர் மதுரம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது அனுப்பானடி பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு கோ‌ஷம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் குறைகளை கேட்பதற்காக ஆணையாளர் அனீஷ் சேகர் வெளியே வந்தார். அவரிடம் பொதுமக்கள் குறைகளை பட்டியலிட்டனர்.

அதாவது தங்கள் பகுதியில் உள்ள குழாய்களில் குடிநீர் வருவதில்லை. லாரி மூலம் வழங்கப்படும் குடிநீர், சுத்தமாக இல்லை. அதுமட்டுமின்றி, தங்கள் பகுதியில் சுகாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. சாலைகள் மேடு, பள்ளமாக உள்ளது. எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று கூறினர்.

குடிநீர் வினியோகம் சீராக இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அடிப்படை வசதிகள் அனைத்தும் சீர் செய்யப்படும் என்றும் ஆணையாளர் அவர்களிடம் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே, துப்புரவு பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா மாளிகையில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர் அங்கு இல்லாததால் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story