தூத்துக்குடியில் ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்து சித்த மருத்துவ கல்லூரி மாணவி வங்கி கணக்கில் ரூ.40 ஆயிரம் திருட்டு
தூத்துக்குடியில் சித்த மருத்துவ கல்லூரி மாணவியின் ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்து, அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் சித்த மருத்துவ கல்லூரி மாணவியின் ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்து, அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
சித்த மருத்துவ கல்லூரி மாணவிதூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகள் மீரா (வயது 24). இவர் பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் பான்கார்டு எடுப்பதற்காக தூத்துக்குடிக்கு பஸ்சில் வந்தார். அப்போது மீரா தனது கைப்பைக்குள், ஒரு மனிபர்சு வைத்து இருந்தாராம். தூத்துக்குடி கோர்ட்டு அருகே பஸ்சில் இருந்து அவர் இறங்கி உள்ளார். அப்போது கைப்பையில் வைத்து இருந்த மணிபர்சை யாரோ மர்ம நபர் திருடி இருப்பது தெரியவந்தது.
ஏ.டி.எம். கார்டுஇதனால் மீரா பதற்றம் அடைந்தார். பின்னர் சில மணி நேரம் கழித்து மீராவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு பள்ளிக்கூட மாணவி, தான் அம்பேத்கார் நகரில் இருப்பதாகவும், தான் பஸ்சில் வந்த போது, யாரோ தனது புத்தக பைக்குள் ஒரு மணிபர்சு வைத்து இருப்பதாகவும், அதில் இருந்த எண்ணை வைத்து தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்து உள்ளார். இதனால் மீரா, அம்பேத்கார் நகருக்கு சென்று அந்த மாணவியிடம் இருந்து மணிபர்சை பெற்றுக் கொண்டார். ஆனால் அந்த பர்சில் இருந்த ஏ.டி.எம். கார்டை மட்டும் காணவில்லை. அந்த ஏ.டி.எம். கார்டின் பின்பகுதியில், அதற்கு உரிய ரகசிய குறியீட்டு எண்ணை எழுதி வைத்து இருந்தாராம்.
திருட்டுஇந்த நிலையில் மீராவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரம் எடுத்து இருப்பதாக அவருடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீரா தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏ.டி.எம். கார்டை அபேஸ் செய்து விட்டு, பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.