மதக்கலவரங்களை தூண்டிவிட்டு காங்கிரஸ் அரசு மீது அவப்பெயர் ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு


மதக்கலவரங்களை தூண்டிவிட்டு காங்கிரஸ் அரசு மீது அவப்பெயர் ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி  தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 July 2017 2:30 AM IST (Updated: 20 July 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

மதக்கலவரங்களை தூண்டிவிட்டு காங்கிரஸ் அரசு மீது அவப்பெயரை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டி உள்ளார்.

குடகு,

மதக்கலவரங்களை தூண்டிவிட்டு காங்கிரஸ் அரசு மீது அவப்பெயரை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

குடகு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சோமவார்பேட்டை டவுன் குடவா சமஜா கட்டிடத்தில் நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–

முதல்–மந்திரி சித்தராமையா தலைமையிலான அரசு அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அன்னபாக்ய திட்டம், ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. 4 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடக மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்கிறது. காங்கிரஸ் அரசின் திட்டங்கள் பற்றி ஏழை–எளிய மக்களுக்கு கட்சி தொண்டர்கள் தெரிவிக்க வேண்டும்.

அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி

காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தாலும், பா.ஜனதாவினர், காங்கிரஸ் அரசு மக்களுக்காக எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை என கூறிவருகின்றனர். கடந்த பா.ஜனதா ஆட்சியில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேடுகளில் பா.ஜனதா தலைவர்களே ஈடுபட்டனர். பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோது, அரசு கஜானாவை காலி செய்துவிட்டனர். அப்படி இருந்தும் காங்கிரஸ் அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் காங்கிரஸ் அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர்.

இதனால், பா.ஜனதாவினர் மதக்கலவரங்களை தூண்டிவிட்டு காங்கிரஸ் அரசு மீது மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story