தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானைகள் அட்டகாசம் பரண் அமைத்து பயிர்களை பாதுகாக்கும் விவசாயிகள்
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் பரண் அமைத்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதியை ஒட்டி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். ஆனால் இந்த விவசாய நிலங்களுக்குள் இரவு நேரங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இதன் காரணமாக விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் குடிசை போன்று பரண் அமைத்து இரவு முழுவதும் காவல் இருந்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். அப்போது இரவு நேரங்களில் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்தால், காவலுக்கு இருக்கும் விவசாயிகள் பட்டாசுள் வெடித்தும், அதிக சத்தங்கள் எழுப்பியும் யானைகளை விரட்டுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று லக்கசந்திரம் கிராமத்தை சேர்ந்த பைராஜ் என்பவர் அதே பகுதியில் உள்ள அஞ்செட்டி சாலையில் நடைபயிற்சி சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 காட்டு யானைகள் திடீரென பைராஜை துரத்தின. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
அந்த நேரம் விவசாய நிலத்தில் பரண் அமைத்து காவலுக்கு இருந்த விவசாயி வெங்கடேஷ் என்பவர் காட்டு யானைகள் பைராஜை துரத்துவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து அவர் தனது கையில் வைத்திருந்த பட்டாசுகளை வெடித்து அந்த யானைகளை விரட்டியடித்தார். இதையடுத்து அவைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.
தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் இந்த காட்டு யானைகளை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.