டாக்டர் அம்பேத்கர் நமக்கு அளித்து சென்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திட்டமிட்டு அழிக்கிறார்கள் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதிகாரிகள் துணையோடு பிரதமர் மோடி திட்டமிட்டு அழித்து வருகிறார்.
பெங்களூரு,
‘‘டாக்டர் அம்பேத்கர் நமக்கு அளித்து சென்ற இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக அமைப்புகளை ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதிகாரிகள் துணையோடு பிரதமர் மோடி திட்டமிட்டு அழித்து வருகிறார்’’ என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மாநாடுகர்நாடக அரசு சார்பில் பெங்களூருவில் பல்லாரி ரோட்டில் உள்ள விவசாய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் தொடர்பான 3 நாள் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது. மாநாட்டிற்கு முதல்–மந்திரி சித்தராமையா தலைமை தாங்கினார். மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாநாட்டில் அவர் பேசியதாவது:–
‘‘இன்று நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. இந்திய ஜனநாயக அமைப்புகளை அரசு அதிகாரிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் துணையோடு பிரதமர் மோடி திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் நமக்கு அளித்து சென்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் ஜனநாயக அமைப்புகளையும் வேரோடு அழிப்பதே அவர்களின் நோக்கம்.
உரிமைக்குரலை இழந்தோம்ஆங்கிலேயர்கள் இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தபோது நம் நாட்டில் உள்ள லட்சோப லட்சம் பொதுமக்கள் அவர்கள் என்னென்ன செய்தார்களோ அவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்ததால் இந்தியா சுதந்திரத்தை இழந்து அடிமைப்பட்டது. ஆங்கிலேயர்கள் தங்களை அதிகாரம் மிக்கவர்களாக காட்டிக்கொண்டார்கள். தற்போதும் அதே நிலைதான் உருவாகி இருக்கிறது.
பத்திரிகையாளர்கள் தங்கள் கண்முன் நடக்கும் அநியாயங்களை எழுத முடியவில்லை. நீதிபதிகள் இப்படித்தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறார்கள். இந்தியாவின் சுதந்திரத்தை ஆங்கிலேயர்கள் வெறுமனே எடுத்துக்கொள்ளவில்லை. நம் நாட்டவர்கள் சிலரே நமது சுதந்திரத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர். நாம் நமது உரிமைக்குரலை இழந்தோம். ஏனென்றால் நாம் அவர்களிடம் அடிமைப்பட்டுவிட்டோம்.
அதைத்தான் பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இப்போது விரும்புகிறார்கள். இந்தியா அவர்களின் குரலுக்கு அடிமைப்பட்டுகிடக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். மக்களின் உரிமைக்குரலை ஒடுக்குவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவர்களை பயமுறுத்துவது. மற்றொன்று உரக்க கத்துவது. ஏனென்றால் அப்போது யாருக்கும் என்னவென்று புரியாது. நரேந்திர மோடிஜியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதைத்தான் தற்போது செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நிர்வாணமாக இருக்கும் பேரரசர்ஒன்றை மறந்துவிடக்கூடாது நாம் உண்மையை உணர்ந்து உறுதியாக இருக்கவில்லை என்றால் ஒவ்வொரு இந்தியனின் உரிமைக்குரலும் ஒடுக்கப்பட்டுவிடும், ஒவ்வொரு இந்தியனின் எதிர்காலமும் கொள்ளை அடிக்கப்பட்டுவிடும். நாம் அதற்கு இடம்கொடுத்துவிடக்கூடாது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, விவசாயிகளின் குரலை கேட்க மறுக்கும் விஷயத்தில் நிர்வாணமாக இருக்கும் பேரரசர் போல் மோடி இருக்கிறார். அவரை சுற்றி இருப்பவர்கள் யாருக்கும் நீங்கள் நிர்வாணமாக இருக்கிறீர்கள் அது அசிங்கம் என்று சொல்வதற்கு துணிச்சல் இல்லை.’’
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். மாநாட்டில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மந்திரிகள் மகாதேவப்பா, ஆஞ்சநேயா, டி.பி.ஜெயச்சந்திரா, ரோஷன் பெய்க் உள்ளிட்ட மந்திரிகள் கலந்த கொண்டனர். மாநாடு நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை தொடர்ந்து நடக்கிறது.