மங்களூரு அருகே, மூகாம்பிகை கோவிலின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் அம்மன் நகைகள், வெள்ளி பூஜை பொருட்கள் திருட்டு


மங்களூரு அருகே, மூகாம்பிகை கோவிலின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் அம்மன் நகைகள், வெள்ளி பூஜை பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 22 July 2017 2:30 AM IST (Updated: 22 July 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு அருகே உள்ள மூகாம்பிகை கோவிலின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான அம்மன் நகைகள் மற்றும் வெள்ளி பூஜை பொருட்களை திருடிச்சென்ற

மங்களூரு,

மங்களூரு அருகே உள்ள மூகாம்பிகை கோவிலின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான அம்மன் நகைகள் மற்றும் வெள்ளி பூஜை பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

அம்மன் நகைகள் திருட்டு

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே முல்கி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பின்னிகோலி பகுதியில் மூகாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவிலில் பூஜைகள் முடிந்து பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் கோவிலை பூட்டிவிட்டு தங்களுடைய வீடுகளுக்கு சென்றுவிட்டனர். நேற்று முன்தினம் காலையில் அவர்கள் கோவிலுக்கு வந்தனர்.

அப்போது கோவிலின் நுழைவு வாயிலின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது கோவிலில் அம்மன் கருவறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி பூஜை பொருட்கள் மற்றும் அம்மன் நகைகள் ஆகியவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பூஜை பொருட்கள் மற்றும் அம்மன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. திருட்டுப்போன பொருட்கள் மற்றும் நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வலைவீச்சு

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் முல்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த முல்கி போலீசார் இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபா தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்த தடயங்களை கைப்பற்றினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் கோவிலில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் தாங்கள் கைப்பற்றிய தடயங்களை ஆய்வுக்காக தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். அம்மன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story