மும்பை– புனே நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து கன்டெய்னர் லாரி டிரைவர் பலி


மும்பை– புனே நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து கன்டெய்னர் லாரி டிரைவர் பலி
x
தினத்தந்தி 22 July 2017 4:30 AM IST (Updated: 22 July 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

மும்பை– புனே நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை,

மும்பை– புனே நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

4 வாகனங்கள் மோதி விபத்து

மும்பை– புனே நெடுஞ்சாலையில் நேற்று காலை 6 மணியளவில் கன்டெய்னர் லாரி ஒன்று மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி கோபாலி அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதியது.

கன்டெய்னர் லாரி இடித்து தள்ளியதில் அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் மீது மோதியது.

இந்த நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு டேங்கர் லாரி விபத்தில் சிக்கிய 3 வாகனங்கள் மீதும் மோதி நின்றது. 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட இந்த விபத்து கண்இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது.

டிரைவர் பலி

இந்த விபத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த பயணிகள் யாரும் காயமடைவில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்து பற்றி அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கோபோலி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் கன்டெய்னர் லாரி டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான டிரைவர் மற்றும் காயம் அடைந்தவர்களின் பெயர் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. மழையின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story